அம்பேத்கரின் நேர்மையை , சமூக நீதிக்கான இச்சையை , மனிதர்களைப் படிக்கும் கலையை , அறம்கொண்ட சமூகக் கட்டமைப்பின் மீதான விருப்பை , புலமையை , விவேகத்தை . மனிதநேயச் சமயக் கொள்கையை , எல்லாவற்றிற்கும் மேலாக எளிமையான மனிதர்களை உயர்நிலைக்குக் கொண்டு வருவதன் மூலம் இவ்வுலகை மறுகட்டமைப்புச் செய்யும் . அவரது நோக்கத்தை இக்கடிதங்களில் காண முடியும் . தீவிரச் செயல்பாட்டில் ஈடுபடும் வலிமையின் இதயம் கொண்டவரை . ஒடுக்கப்பட்டோரின் விடுதலை வேண்டுபவரை . மாயைகளை உடைப்பவரை , நகைச்சுவை உணர்வும் பகடியும் கைவரப்பெற்ற மனிதரைக் காணமுடியும் இத்தொகுப்பில் , எப்போதும் போராட்டத்திலேயே உழன்று கசப்பின் தழும்புகளைக் கொண்டிருந்தவர் அம்பேத்கர் . அவரது மென்மையை , சாதி , மத , இன , பிரதேச , மொழி , பாலின வேறுபாடுகளைக் கடந்த மொத்த மனிதகுலத்திற்கான அவர் தரிசனத்தை , விலங்குகளின்பால்கூட நேசத்தைச் சுரந்த அவரது அன்பான இதயத்தை இக்கடிதங்களில் காண முடியும் . அவரின் நெகிழ்ச்சியான சில முக்கியப் புள்ளிகளை இத்தொகுப்பில் தரிசிக்கலாம் .
பௌத்தம் ஒரு மதமல்ல , ஓர் அரசியல் சிந்தனை . புத்தர் ஓர் அரசியல் சிந்தனையாளர் ; உலகின் பல சிந்தனையாளர்களுக்கும் தத்துவவாதிகளுக்கும் முன்னோடியாக விளங்குகிறார் ‘
–காஞ்ச அய்லய்யா
இன்றைய நவீன உலகம் அறிந்திருக்கும் பாராளுமன்ற நடைமுறை விதிகளைப் பௌத்தச் சங்கங்கள் அன்றே அறிந்திருந்தன ; அவற்றைப் பின்பற்றவும் செய்தன . இருக்கைகள் எப்படி அமைக்கப்பட வேண்டும் என்பதற்கும் விதிகள் இருந்தன ; தீர்மானங்கள் கொண்டுவருவது குறித்தும் , தீர்மானங்கள் குறித்தும் , குறைவெண் வரம்பு , கொறடா , வாக்குகள் எண்ணுதல் , வாக்குச் சீட்டுகள் மூலம் வாக்களித்தல் , ஒருவர்மீது கண்டன தீர்மானம் கொண்டுவருதல் , ஒழுங்குமுறைப்படுத்துதல் , தீர்ப்பு வழங்குதல் போன்ற அனைத்திற்கும் விதிகள் இருந்தன . எனினும் , ஒருவரது பொருளாதார , சமுதாய , அரசியல் சுதந்திரத்தின் நடைமுறைச் செயல்பாட்டில்தான் பௌத்தத்தின் சாரம் இருக்கிறது . ஜனநாயகத்தின் வழிகாட்டியாகப் புத்தர் இருந்தார் . சுதந்திரம் , சமத்துவம் , சகோதரத்துவம் குறித்து தீவிரமாக அவர் பேசினார் ‘