100 கேள்விகள், 100 பதில்கள்! இளம் வாசகர்கள் ஒவ்வொருவருக்கும் காந்தியை அழகாகவும் தெளிவாகவும் கொண்டுசென்று சேர்க்கும் நூல். காந்தி வெளிநாட்டில் படித்தபோது என்ன கற்றுக்கொண்டார்? கல்லூரியில் அவர் எப்படிப்பட்ட மாணவர்? தென்னாப்பிரிக்காவில் அவர் என்ன செய்தார்? ஏன் இந்தியா திரும்பினார்? அவர் அடிக்கடி பயன்படுத்திய சத்தியாக்கிரகம் என்ற சொல்லை யார் உருவாக்கினார்? அவர் கிரிக்கெட் பார்ப்பாரா? சினிமா பிடிக்குமா? வாழ்க்கை, அரசியல், தத்துவம், போராட்டக்குணம், எழுத்துப்பணி, விடுதலைப் போராட்ட வாழ்க்கை என்று காந்தியோடு தொடர்புடைய அனைத்தையும் எளிய கேள்வி பதில் பாணியில் இந்நூல் நமக்கு அறிமுகம் செய்கிறது. இதைவிடவும் எளிமையாக காந்தியை அறிமுகப்படுத்தமுடியாது. காந்தி என்றாலே எளிமைதான், இல்லையா?175
எளிய மக்களின் கதைகளை எளிய மொழியிலேயே சொல்லிவிடமுடியும் என்றாலும் இறக்குமதி செய்யப்பட்ட வெவ்வேறு பாணிகளைக் கையாண்டு அக்கதைகளைச் சிக்கலானவையாக மாற்றிவிடுகிறார்கள் பலர். அப்படி மாற்றினால் மட்டுமே அது இலக்கியமாகக் கொள்ளப்படும் என்றும் அவர்கள் நம்புகிறார்கள். சோம. வள்ளியப்பனின் எழுத்து அந்த வகையில் மாறுபட்டது. சமுதாயத்தில் நம்மைச் சுற்றிப் பல்வேறு நிலைகளில் வாழும் மனிதர்களை, அவர்களின் குணாதிசயங்களை, பலதரப்பட்ட உணர்வுகளை, அவரவர் நிலைப்பாடுகளை சிக்கலில்லாத, குழப்பமில்லாத நடையில் விவரித்துக்கொண்டு செல்கிறார் அவர். அந்த எளிமை அதற்குண்டான வசீகரத்தை எப்படியோ பெற்றுக்கொண்டு விடுகிறது. நீங்களும் அதை உணர்வீர்கள். ஜீவனுள்ள இந்தக் கதைகள் உங்களோடு நேரடியாகப் பேசும். தாக்கத்தையும் ஏற்படுத்தும். சோம. வள்ளியப்பனின் எழுத்தில் ‘நெஞ்சமெல்லாம் நீ’ என்னும் சிறுகதைத் தொகுப்பும் ‘பட்டாம்பூச்சியின் கண்ணாமூச்சி காலங்கள்’ என்னும் குறுநாவலும் முன்னதாக வெளிவந்துள்ளன.
ஹரித்ரா நதி நாஸ்டால்ஜியா என்ற நனைவிடைத் தோய்தல் எப்போதும் வசீகரமானது. எழுத்தாளரும் வாசகரும் சேர்ந்து அமர்ந்திருக்கும் பள்ளிக்கூட வகுப்பு மர பெஞ்ச் அது. உத்தமதானபுரம் பற்றி எழுதி ‘என் சரித்திரம்’ என்ற தம் வரலாற்றைத் தொடங்கிய தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாதய்யரும், தாம் பிறந்த சிவகங்கை பற்றி எழுதிய கவியோகி சுத்தானந்த பாரதியாரும், வலங்கைமான் குறித்து எழுதிய ரைட் ஹானரபில் ஸ்ரீனிவாச சாஸ்திரியாரும், யாழ்ப்பாணம் பற்றிக் கட்டுரை வடித்த எஸ்.பொன்னுதுரையும் சந்திக்கும் காலம், இடம் கடந்த வெளி இந்த பிள்ளைப் பருவ நினைவுப் பரப்பு. பின்னாட்களில் சுஜாதாவின் ‘ஸ்ரீரங்கத்துத் தேவதை’யில் இந்த ழானர் (எஞுணணூஞு) புத்துயிர் பெற்றது. எவ்வளவு எழுதினாலும், எவ்வளவு படித்தாலும் நினைவுகளை அசைபோட்டு நடக்கும் உலா அலுப்பதே இல்லை. நானும் எழுதியிருக்கிறேன். இப்போது பளிச்சென்று ஒளிரும் நட்சத்திரமாக ஆர்.வி.எஸ், மன்னார்குடி நினைவுகளைப் பகிர்ந்துகொள்கிறார். பொங்கிக் கரை புரண்டு வரும் காவிரி போல நினைவலைகள் தன் பதின்ம வயதைத் தொட்டுத் தொட்டுத் திரும்ப, நண்பர் ஆர்.வி.எஸ் இந்தப் புத்தகத்தில் நனவிடைத் தோய்ந்திருக்கிறார். 1980-களின் மன்னையைத் தெப்பம் போல் ஹரித்ராநதியில் மிதக்க விட்டுக் காலப் பிரவாகத்தில் முன்னும் பின்னும் சுற்றி வந்து பழைய ஞாபகங்களை அகழ்ந்தெடுத்துப் பங்கு போட்டுக்கொள்கிறார் ஆர்.வி.எஸ். நானும் இதை வாசிக்கிற நீங்களும் கடந்து வந்த தெரு, நினைவில் விரியும் ஹரித்ராநதிக் கரை வீதி. ஆர்.வி.எஸ் கையைப் பிடித்துக் கொண்டு பராக்குப் பார்த்தபடி வலம் வருகிறோம். – இரா.முருகன்
அந்நியர்களின் கண்கள் வழியே விரியும் இந்தியாவின் வரலாறு. உலகின் பல மூலைகளிலிருந்து பெருங்கனவோடு புறப்பட்டு வந்து இந்தியாவைக் கண்டும் உணர்ந்தும் வியந்தும் எழுதியவர்களின் கதை. முழுக்க அயலவரின் பார்வையில் இருந்து இந்தியாவின் 2,500 ஆண்டுகால வரலாறு கண்முன் விரிகிறது. பண்டைய கிரேக்கர்களின் இந்தியா, சீன பௌத்தர்களின் இந்தியா, ஐரோப்பியர்களின் இந்தியா மூன்றும் இடம்பெற்றுள்ளன. மெகஸ்தனிஸ், அலெக்சாண்டர், பாஹியான், யுவான் சுவாங், அல்பெரூனி, மார்கோ போலோ, இபின் பதூதா என்று தொடங்கி பலர் நம்மோடு உரையாடுகிறார்கள். நம் நிலம், நம் கடல், நம் கடவுள், நம் வாழ்க்கை, நம் சாதி, நம் வழிபாடு, நம் நம்பிக்கை, நம் மூடநம்பிக்கை, நம் தத்துவம், நம் போர், நம் காதல், நம் இலக்கியம், நம் கனவு என்று அனைத்தையும் ஆராய்கிறார்கள். ஜூனியர் விகடனில் வெளிவந்து கவனம் பெற்ற தொடரின் நூலாக்கம்.
இந்தியத் துணைக்கண்டத்தைச் சேர்ந்த முஸ்லிம் சமூகங்கள் பற்றிய ஒரு பருந்துப் பார்வை. 20ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சைய்யத் அகமது கான், முகம்மது இக்பால், முகம்மது அலி, பசுலுல் ஹக், முகம்மது அலி ஜின்னா, அபுல் கலாம் ஆசாத், லியாகத் அலி கான், ஜாகிர் ஹுசைன் ஆகிய எட்டு ஆளுமைகள் பற்றிய விரிவான சித்திரங்கள் இதில் அடங்கியுள்ளன. இந்தச் சித்திரங்களின் ஊடாக இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த முஸ்லிம் சமூகங்கள் குறித்த மிக விரிவான, மிக ஆழமான ஓர் அறிமுகம் நமக்குக் கிடைக்கிறது. இந்தியப் பிரிவினை தவிர்க்கவியலாததா? அதற்கு யார் காரணம்? பிரிவினையைத் தொடர்ந்து இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் ஓடிய ரத்த ஆற்றைத் தடுத்திருக்க முடியுமா? இஸ்லாமியர்களுக்கென்று ஒரு தனி நாடுஅமைக்கவேண்டும் என்பதுதான் ஜின்னாவின் மெய்யான நோக்கமா? இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் நல்லுறவு சாத்தியமா? இன்றும் பெரும் தாக்கம் செலுத்தும், பலத்த விவாதங்களைக் கிளப்பும் முக்கியக் கேள்விகளுக்கு ராஜ்மோகன் காந்தி விரிவான விடைகளை அளிக்கிறார். வரலாற்றிலிருந்து நாம் கற்கவேண்டிய சில முக்கியமான பாடங்களையும் அவர் நம்மோடு பகிர்ந்துகொள்கிறார். ராஜ்மோகன் காந்தியின் Understanding the Muslim Mind நூலின் அதிகாரபூர்வமான தமிழாக்கம் இது,
அம்பேத்கர், காந்தி, நேரு, மார்டின் லூதர் கிங், ஐன்ஸ்டைன், காஸ்ட்ரோ, கென்னடி, சர்ச்சில் என்று வரலாற்றின் போக்கை மாற்றியமைத்த மகத்தான தலைவர்களின் மிகச் சிறந்த உரைகள் அடங்கிய தொகுப்பு இது.
ஒவ்வோர் உரையும் நமக்குள் கரையும். நம் இதயத்தில் தங்கும். புதிய கோணங்களில் சிந்திக்கவும் புதிய உத்வேகத்தோடு போராடவும் நம்மை உந்தித் தள்ளும். சாதி, நிறம், பாலினம், வர்க்கம் என்று பிரிந்து கிடக்கும் மக்களை ஒன்றிணைக்கும் ஆற்றல் இதிலுள்ள ஒவ்வொரு குரலுக்கும் உண்டு.
இது காலத்தின் குரல் மட்டுமல்ல.
காலத்தைக் கடந்து உயிர்ப்போடு திரண்டு நிற்கும் மனிதத்தின் குரலும்கூட. இஸ்க்ராவின் அழகிய, உணர்வுப்பூர்வமான மொழிபெயர்ப்பில் மலரும் இந்நூல் படிக்கவும் பரிசளிக்கவும் ஏற்றது.
பறவைகளின் வண்ணமயமான உலகுக்குள் நுழைய வேண்டுமா? இதோ ஒரு கையடக்க வழிகாட்டி!
ஒரு பறவை எப்படித் தோன்றுகிறது? எப்படி உண்ணவும் உறங்கவும் பறக்கவும் கற்றுக்கொள்கிறது? எப்படிச் செய்திகளைப் பரிமாறிக்கொள்கிறது? எப்படித் தன்னைத் தற்காத்துக்கொள்கிறது?
எவ்வாறு கூடு கட்டுகிறது? இறக்கை பறப்பதற்கு மட்டும்தான் உதவுமா? ஒவ்வொரு பறவைக்கும் ஒவ்வொரு விதமான அலகு இருப்பது ஏன்? பறவைகள் எங்கிருந்து இவ்வளவு அழகிய வண்ணங்களைப் பெறுகின்றன?
பிரபஞ்சம், உயிர்களின் தோற்றம், பரிணாம வளர்ச்சி என்று மிக விரிவான பின்னணியில் பறவைகளின் கதையை விவரிக்கிறது இந்நூல். ஒரே நேரத்தில் அறிவியல் களஞ்சியமாகவும் அழகியல் படைப்பாகவும் இது மிளிர்வதைக் காணலாம்.
ஒரு பறவையாக இருப்பது என்றால் என்ன என்பதை இவ்வளவு நுணுக்கமாகவும் இவ்வளவு சுவையாகவும் விவரிக்கும் இன்னொரு நூல் தமிழில் வந்ததில்லை. திருச்சி தேசியக் கல்லூரியில் விலங்கியல் துறைத் தலைவராகப் பணிபுரியும் கோகுலாவின் இந்நூல் பறவையியல், சூழலியல், அறிவியல் உள்ளிட்ட துறைகளில் ஆர்வம் கொண்டவர்களுக்குப் பெரும் திறப்பாக அமையும்.
‘எந்த அறிவுச் செயல்பாட்டையும் அப்படியே ஏற்றுக் கொள்வதில் சிக்கல் உள்ளது எனக் கலைத்துப் போட்டுக் கலக வாசிப்புக்கு அடித்தளம் இடும் நூல்.’ — அ. மங்கை
கலகக்காரர் என்றதும் புத்தர், இயேசு, ஸ்பார்டகஸ், காந்தி, சே குவேரா போன்ற நாயகர்கள்தாம் உடனடியாக நம் நினைவுக்கு வருகின்றனர். அநீதிக்கு எதிராகப் போரிடும் குணம் ஆண்களுக்கு மட்டுமே உரித்தானது என்னும் அழுத்தமான நம்பிக்கைதான் இதற்குக் காரணம்.
பொதுப்புத்தியாகவே மாறிவிட்ட இந்தக் கருத்தைத் தலைகீழாகத் திருப்பிப்போடுவதே கலகப் புத்தகத்தின் அடிப்படை நோக்கம்.
வரலாற்றின் இண்டு இடுக்குகளைக் கவனமாக ஆராய்ந்து மறக்கடிக்கப்பட்ட சில முக்கியமான பெண் கலகக்காரர்கள்மீது வெளிச்சத்தைப் பாய்ச்சுகிறது இந்நூல்.
டைட்டானிக் கப்பலிலிருந்து நூற்றுக்கணக்கானோரைக் காப்பாற்றிய மார்கரெட் டோபின், சென்னையில் முதல் தாற்காலிகத் திரையரங்கை நிறுவிய ஃப்ரீடா குளூக், தீப்பெட்டித் தொழிற்ச்
சாலை வேலைநிறுத்தத்தை முன்னெடுத்த சாரா சேப்மன், விக்டோரியா ராணிக்கு எதிர்ப்பிரகடனம் வெளியிட்ட பேகம் ஹஸ்ரத் மஹல், ‘லேடி எடிசன்’ பியூலா லூயிஸ் ஹென்றி,
உளவியல் துறையில் தன் தடத்தைப் பதித்த அன்னா ஃப்ராய்ட் என்று தொடங்கி வண்ணமயமான பல கலகக்காரர்கள் இதில் இடம்பெறுகிறார்கள்.
அடித்தட்டு மக்கள் வரலாறு, சமூக வரலாறு, பெண்ணியம் ஆகிய துறைகளை ஒரு புள்ளியில் இணைக்கும் முக்கியப் பணியை இந்நூலில் முன்னெடுத்திருக்கிறார் நிவேதிதா லூயிஸ். அந்த வகையிலுமேகூட இது ஒரு கலகப் புத்தகம்தான்.
சிவகாமியின் சபதம் புதினத்தின் தொடர்ச்சியாக ‘காஞ்சித் தாரகை’ உருவாகியுள்ளது. சிவகாமியின் சபதம் முடிந்த பதினைந்து ஆண்டுகளுக்குப் பின்னான கதைக் களமாக விரிகிறது காஞ்சித் தாரகை. சிவகாமியின் சபதம் கதையில் நம்மை ஆட்கொண்ட கதாபாத்திரங்களில் நரசிம்மரும், சிறுத்தொண்டரும், சிவகாமியும், ஆயனச் சிற்பியும் இந்தப் புதினத்திலும் வருகிறார்கள். வாசகர்கள் சிவகாமியின் சபதத்தை படித்தபோது அடைந்த மகிழ்ச்சியை இந்த காஞ்சித் தாரகையிலும் அடைவார்கள் என்பதில் எந்தச் சந்தேகமுமில்லை.
சிவகாமியின் சபதம் புதினத்தின் தொடர்ச்சியாக ‘காஞ்சித் தாரகை’ உருவாகியுள்ளது. சிவகாமியின் சபதம் முடிந்த பதினைந்து ஆண்டுகளுக்குப் பின்னான கதைக் களமாக விரிகிறது காஞ்சித் தாரகை. சிவகாமியின் சபதம் கதையில் நம்மை ஆட்கொண்ட கதாபாத்திரங்களில் நரசிம்மரும், சிறுத்தொண்டரும், சிவகாமியும், ஆயனச் சிற்பியும் இந்தப் புதினத்திலும் வருகிறார்கள். வாசகர்கள் சிவகாமியின் சபதத்தை படித்தபோது அடைந்த மகிழ்ச்சியை இந்த காஞ்சித் தாரகையிலும் அடைவார்கள் என்பதில் எந்தச் சந்தேகமுமில்லை.
தினமலரில் வெளிவந்து பல வாசகர்களின் நெஞ்சை அள்ளிய தொடரின் நூல் வடிவம்.
திருக்குறளில் என்னென்ன எண்கள் இடம்பெற்றிருக்கின்றன? வில்லுப்பாட்டு என்னும் பெயர் எப்படி வந்திருக்கும்? கீழை நாடுகள், மேலை நாடுகள் என்றெல்லாம் ஏன் அழைக்கிறோம்? விளம்பரம் என்னும் சொல்லின் கதை என்ன? வானத்தையும் மீனையும் சேர்த்து விண்மீன் என்று ஏன் அழைக்கிறார்கள்? இந்த இரண்டுக்கும் என்ன தொடர்பு?
திருவாசகம் படித்தால் நாம் அழகாக மாறிவிடுவோமா? வள்ளல் என்று யாரை அழைக்கலாம்? அறநூல்கள் நமக்கு ஏன் தேவைப்படுகின்றன? வரலாற்றையும் கதையையும் ஒன்று கலந்து எழுதலாமா?
சுவையான எடுத்துக்காட்டுகளோடு கதைப்போக்கில் அமைந்திருக்கும் இந்நூல் தமிழ் இலக்கணத்தை இனிக்க, இனிக்க அறிமுகப்படுத்துகிறது.
பெரும் வரவேற்பைப் பெற்ற மாணவர்களுக்கான தமிழ் நூல் தொடரின் நான்காம் பாகம் இது.
மிகுந்த பரபரப்போடு செய்தித்தாள்களில் வாசித்திருப்போம். தொலைக்காட்சிகளில் பார்த்திருப்போம். என்ன நடந்தது, எப்படி நடந்தது என்று வியப்போடு நிறையவே விவாதித்திருப்போம். அதன்பின் மெல்ல, மெல்ல நம் நினைவுகளிலிருந்து இந்தச் செய்திகள் மங்கி ஒரு கட்டத்தில் மறைந்தே போயிருக்கும்.
பிரேமானந்தா, ராம்விலாஸ் வேதாந்தி, ஹர்ஷத் மேத்தா, லட்சுமி சிவபார்வதி, வி.வி. கிரி, எம்.எஃப். ஹூசேன், ரஞ்சன் விஜேரத்ன, உமா மகேஸ்வரன் போன்றோரைக் கடைசியாக எப்போது நாம் கடந்து வந்தோம்? இவர்கள் உருவாக்கிய புயல் எந்த அளவுக்கு இன்று நம் நினைவில் இருக்கிறது?
வரலாற்றின் இண்டு இடுக்குகளில் அகழ்வாராய்ச்சி செய்து ஒரு காலத்தில் பெரும் தாக்கம் செலுத்திய பல ஆளுமைகளையும் அரசியல் நிகழ்வுகளையும் மீட்டெடுத்து வந்து அளிக்கிறார்
ஜெ. ராம்கி. ஒவ்வோர் அத்தியாயமும் ஒரு துப்பறியும் கதைபோல் இறக்கைக் கட்டிப் பறக்கிறது.
வீட்டின் வரவு செலவு கணக்கே பெரும்பாடாக இருக்கும்போது எங்கே நாட்டின் பொருளாதாரம் குறித்து யோசிப்பது? இப்படி நினைப்பவர்கள்தான் நம்மில் அநேகம் பேர். ஆனால் நம் நாட்டில் என்ன நடக்கிறது என்பதற்கும் நம் வீட்டில் என்ன நடக்கிறது என்பதற்கும் நேரடித் தொடர்பு இருக்கிறது.
ஆண்டுக்கொரு முறை வருமான வரி கட்டுகிறோம். அரசு அளிக்கும் சலுகைகளைப் பெற்றுக்கொள்கிறோம். இத்தோடு நமக்கும் நம் நாட்டுக்கும் உள்ள தொடர்பு முடிந்துவிடுகிறது என்று நினைத்துக்கொள்கிறோம். தவறு.
நீங்கள் கட்டும் வரியை யார் நிர்ணயம் செய்கிறார்கள்? உங்களுக்கு அரசால் எப்படிச் சில சலுகைகளை அளிக்கமுடிகிறது? அதற்கான நிதியை அரசு எப்படிப் பெறுகிறது? அரசு எவ்வாறு வருமானம் ஈட்டுகிறது? சாலை, குடிநீர், கட்டுமானம், ராணுவம் என்று எப்படி அரசால் செலவழிக்கமுடிகிறது? அரசும் நம்மைப் போல் கடன் வாங்குமா? எனில் யாரிடமிருந்து? அரசும் வரவு செலவு கணக்கு போட்டுப் பார்க்குமா? அரசுக்கும் பொருளாதார நெருக்கடிகள் தோன்றுமா? ஆம் எனில் அவற்றை எப்படி அவர்கள் கையாள்கிறார்கள்? இப்படியாக ஒவ்வொரு தலைப்பையும் அக்குவேறு, ஆணிவேறாக பிரித்து அரசு ஒரு பட்ஜெட்டை எப்படித் தயாரிக்கிறார்கள் என்பது வரை நாம் கனம் என்று நினைக்கும் ஒரு விஷயத்தை மிக, மிக எளிதாக, இலகுவாக நமக்கு அறிமுகப்படுத்துகிறார் சோம. வள்ளியப்பன்.