வீட்டின் வரவு செலவு கணக்கே பெரும்பாடாக இருக்கும்போது எங்கே நாட்டின் பொருளாதாரம் குறித்து யோசிப்பது? இப்படி நினைப்பவர்கள்தான் நம்மில் அநேகம் பேர். ஆனால் நம் நாட்டில் என்ன நடக்கிறது என்பதற்கும் நம் வீட்டில் என்ன நடக்கிறது என்பதற்கும் நேரடித் தொடர்பு இருக்கிறது.
ஆண்டுக்கொரு முறை வருமான வரி கட்டுகிறோம். அரசு அளிக்கும் சலுகைகளைப் பெற்றுக்கொள்கிறோம். இத்தோடு நமக்கும் நம் நாட்டுக்கும் உள்ள தொடர்பு முடிந்துவிடுகிறது என்று நினைத்துக்கொள்கிறோம். தவறு.
நீங்கள் கட்டும் வரியை யார் நிர்ணயம் செய்கிறார்கள்? உங்களுக்கு அரசால் எப்படிச் சில சலுகைகளை அளிக்கமுடிகிறது? அதற்கான நிதியை அரசு எப்படிப் பெறுகிறது? அரசு எவ்வாறு வருமானம் ஈட்டுகிறது? சாலை, குடிநீர், கட்டுமானம், ராணுவம் என்று எப்படி அரசால் செலவழிக்கமுடிகிறது? அரசும் நம்மைப் போல் கடன் வாங்குமா? எனில் யாரிடமிருந்து? அரசும் வரவு செலவு கணக்கு போட்டுப் பார்க்குமா? அரசுக்கும் பொருளாதார நெருக்கடிகள் தோன்றுமா? ஆம் எனில் அவற்றை எப்படி அவர்கள் கையாள்கிறார்கள்? இப்படியாக ஒவ்வொரு தலைப்பையும் அக்குவேறு, ஆணிவேறாக பிரித்து அரசு ஒரு பட்ஜெட்டை எப்படித் தயாரிக்கிறார்கள் என்பது வரை நாம் கனம் என்று நினைக்கும் ஒரு விஷயத்தை மிக, மிக எளிதாக, இலகுவாக நமக்கு அறிமுகப்படுத்துகிறார் சோம. வள்ளியப்பன்.
வன்முறை குறித்து நமக்கிருக்கும் புரிதல் குறுகலானது. ஒருவரது உடலை மட்டுமே தாக்கமுடியும் என்றும் உடல் மட்டுமே வலியை உணரும் என்றும் நாம் நம்புகிறோம். தவறு. மனதைக் காயப்படுத்துவதும் வன்முறைதான். ஆயுதம் கொண்டு ஒருவரைத் தாக்குவது தீவிர வன்முறை என்றால் சொற்கள் கொண்டு நோகடிப்பது மென் வன்முறை.
எனில், எந்தச் சொல் தவறானது என்பதை எப்படி உணர்வது? மென்மையாகவும்கூட ஒருவரைத் துன்புறத்தாமல் இருக்க நாம் என்ன செய்யவேண்டும், என்ன செய்யக்கூடாது?
கார்குழலி இந்நூலில் தன்னுடைய அனுபவப் பகிர்வுகளின்மூலம் முன்னெடுக்கும் உரையாடல் முக்கியமானது. எங்கே தவறு என்பதைச் சுட்டிக்காட்டுவதோடு நின்றுவிடாமல் அதைச் சரி செய்வதற்கான வழிமுறைகளையும் விவாதிக்கிறார். நம் சிந்தனைகளையும் செயல்பாடுகளையும் மாற்றியமைக்கும் ஆற்றல் கொண்ட நூல்.