அம்பேத்கர், காந்தி, நேரு, மார்டின் லூதர் கிங், ஐன்ஸ்டைன், காஸ்ட்ரோ, கென்னடி, சர்ச்சில் என்று வரலாற்றின் போக்கை மாற்றியமைத்த மகத்தான தலைவர்களின் மிகச் சிறந்த உரைகள் அடங்கிய தொகுப்பு இது.
ஒவ்வோர் உரையும் நமக்குள் கரையும். நம் இதயத்தில் தங்கும். புதிய கோணங்களில் சிந்திக்கவும் புதிய உத்வேகத்தோடு போராடவும் நம்மை உந்தித் தள்ளும். சாதி, நிறம், பாலினம், வர்க்கம் என்று பிரிந்து கிடக்கும் மக்களை ஒன்றிணைக்கும் ஆற்றல் இதிலுள்ள ஒவ்வொரு குரலுக்கும் உண்டு.
இது காலத்தின் குரல் மட்டுமல்ல.
காலத்தைக் கடந்து உயிர்ப்போடு திரண்டு நிற்கும் மனிதத்தின் குரலும்கூட. இஸ்க்ராவின் அழகிய, உணர்வுப்பூர்வமான மொழிபெயர்ப்பில் மலரும் இந்நூல் படிக்கவும் பரிசளிக்கவும் ஏற்றது.
பறவைகளின் வண்ணமயமான உலகுக்குள் நுழைய வேண்டுமா? இதோ ஒரு கையடக்க வழிகாட்டி!
ஒரு பறவை எப்படித் தோன்றுகிறது? எப்படி உண்ணவும் உறங்கவும் பறக்கவும் கற்றுக்கொள்கிறது? எப்படிச் செய்திகளைப் பரிமாறிக்கொள்கிறது? எப்படித் தன்னைத் தற்காத்துக்கொள்கிறது?
எவ்வாறு கூடு கட்டுகிறது? இறக்கை பறப்பதற்கு மட்டும்தான் உதவுமா? ஒவ்வொரு பறவைக்கும் ஒவ்வொரு விதமான அலகு இருப்பது ஏன்? பறவைகள் எங்கிருந்து இவ்வளவு அழகிய வண்ணங்களைப் பெறுகின்றன?
பிரபஞ்சம், உயிர்களின் தோற்றம், பரிணாம வளர்ச்சி என்று மிக விரிவான பின்னணியில் பறவைகளின் கதையை விவரிக்கிறது இந்நூல். ஒரே நேரத்தில் அறிவியல் களஞ்சியமாகவும் அழகியல் படைப்பாகவும் இது மிளிர்வதைக் காணலாம்.
ஒரு பறவையாக இருப்பது என்றால் என்ன என்பதை இவ்வளவு நுணுக்கமாகவும் இவ்வளவு சுவையாகவும் விவரிக்கும் இன்னொரு நூல் தமிழில் வந்ததில்லை. திருச்சி தேசியக் கல்லூரியில் விலங்கியல் துறைத் தலைவராகப் பணிபுரியும் கோகுலாவின் இந்நூல் பறவையியல், சூழலியல், அறிவியல் உள்ளிட்ட துறைகளில் ஆர்வம் கொண்டவர்களுக்குப் பெரும் திறப்பாக அமையும்.
‘எந்த அறிவுச் செயல்பாட்டையும் அப்படியே ஏற்றுக் கொள்வதில் சிக்கல் உள்ளது எனக் கலைத்துப் போட்டுக் கலக வாசிப்புக்கு அடித்தளம் இடும் நூல்.’ — அ. மங்கை
கலகக்காரர் என்றதும் புத்தர், இயேசு, ஸ்பார்டகஸ், காந்தி, சே குவேரா போன்ற நாயகர்கள்தாம் உடனடியாக நம் நினைவுக்கு வருகின்றனர். அநீதிக்கு எதிராகப் போரிடும் குணம் ஆண்களுக்கு மட்டுமே உரித்தானது என்னும் அழுத்தமான நம்பிக்கைதான் இதற்குக் காரணம்.
பொதுப்புத்தியாகவே மாறிவிட்ட இந்தக் கருத்தைத் தலைகீழாகத் திருப்பிப்போடுவதே கலகப் புத்தகத்தின் அடிப்படை நோக்கம்.
வரலாற்றின் இண்டு இடுக்குகளைக் கவனமாக ஆராய்ந்து மறக்கடிக்கப்பட்ட சில முக்கியமான பெண் கலகக்காரர்கள்மீது வெளிச்சத்தைப் பாய்ச்சுகிறது இந்நூல்.
டைட்டானிக் கப்பலிலிருந்து நூற்றுக்கணக்கானோரைக் காப்பாற்றிய மார்கரெட் டோபின், சென்னையில் முதல் தாற்காலிகத் திரையரங்கை நிறுவிய ஃப்ரீடா குளூக், தீப்பெட்டித் தொழிற்ச்
சாலை வேலைநிறுத்தத்தை முன்னெடுத்த சாரா சேப்மன், விக்டோரியா ராணிக்கு எதிர்ப்பிரகடனம் வெளியிட்ட பேகம் ஹஸ்ரத் மஹல், ‘லேடி எடிசன்’ பியூலா லூயிஸ் ஹென்றி,
உளவியல் துறையில் தன் தடத்தைப் பதித்த அன்னா ஃப்ராய்ட் என்று தொடங்கி வண்ணமயமான பல கலகக்காரர்கள் இதில் இடம்பெறுகிறார்கள்.
அடித்தட்டு மக்கள் வரலாறு, சமூக வரலாறு, பெண்ணியம் ஆகிய துறைகளை ஒரு புள்ளியில் இணைக்கும் முக்கியப் பணியை இந்நூலில் முன்னெடுத்திருக்கிறார் நிவேதிதா லூயிஸ். அந்த வகையிலுமேகூட இது ஒரு கலகப் புத்தகம்தான்.
சிவகாமியின் சபதம் புதினத்தின் தொடர்ச்சியாக ‘காஞ்சித் தாரகை’ உருவாகியுள்ளது. சிவகாமியின் சபதம் முடிந்த பதினைந்து ஆண்டுகளுக்குப் பின்னான கதைக் களமாக விரிகிறது காஞ்சித் தாரகை. சிவகாமியின் சபதம் கதையில் நம்மை ஆட்கொண்ட கதாபாத்திரங்களில் நரசிம்மரும், சிறுத்தொண்டரும், சிவகாமியும், ஆயனச் சிற்பியும் இந்தப் புதினத்திலும் வருகிறார்கள். வாசகர்கள் சிவகாமியின் சபதத்தை படித்தபோது அடைந்த மகிழ்ச்சியை இந்த காஞ்சித் தாரகையிலும் அடைவார்கள் என்பதில் எந்தச் சந்தேகமுமில்லை.