ஹரித்ரா நதி நாஸ்டால்ஜியா என்ற நனைவிடைத் தோய்தல் எப்போதும் வசீகரமானது. எழுத்தாளரும் வாசகரும் சேர்ந்து அமர்ந்திருக்கும் பள்ளிக்கூட வகுப்பு மர பெஞ்ச் அது. உத்தமதானபுரம் பற்றி எழுதி ‘என் சரித்திரம்’ என்ற தம் வரலாற்றைத் தொடங்கிய தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாதய்யரும், தாம் பிறந்த சிவகங்கை பற்றி எழுதிய கவியோகி சுத்தானந்த பாரதியாரும், வலங்கைமான் குறித்து எழுதிய ரைட் ஹானரபில் ஸ்ரீனிவாச சாஸ்திரியாரும், யாழ்ப்பாணம் பற்றிக் கட்டுரை வடித்த எஸ்.பொன்னுதுரையும் சந்திக்கும் காலம், இடம் கடந்த வெளி இந்த பிள்ளைப் பருவ நினைவுப் பரப்பு. பின்னாட்களில் சுஜாதாவின் ‘ஸ்ரீரங்கத்துத் தேவதை’யில் இந்த ழானர் (எஞுணணூஞு) புத்துயிர் பெற்றது. எவ்வளவு எழுதினாலும், எவ்வளவு படித்தாலும் நினைவுகளை அசைபோட்டு நடக்கும் உலா அலுப்பதே இல்லை. நானும் எழுதியிருக்கிறேன். இப்போது பளிச்சென்று ஒளிரும் நட்சத்திரமாக ஆர்.வி.எஸ், மன்னார்குடி நினைவுகளைப் பகிர்ந்துகொள்கிறார். பொங்கிக் கரை புரண்டு வரும் காவிரி போல நினைவலைகள் தன் பதின்ம வயதைத் தொட்டுத் தொட்டுத் திரும்ப, நண்பர் ஆர்.வி.எஸ் இந்தப் புத்தகத்தில் நனவிடைத் தோய்ந்திருக்கிறார். 1980-களின் மன்னையைத் தெப்பம் போல் ஹரித்ராநதியில் மிதக்க விட்டுக் காலப் பிரவாகத்தில் முன்னும் பின்னும் சுற்றி வந்து பழைய ஞாபகங்களை அகழ்ந்தெடுத்துப் பங்கு போட்டுக்கொள்கிறார் ஆர்.வி.எஸ். நானும் இதை வாசிக்கிற நீங்களும் கடந்து வந்த தெரு, நினைவில் விரியும் ஹரித்ராநதிக் கரை வீதி. ஆர்.வி.எஸ் கையைப் பிடித்துக் கொண்டு பராக்குப் பார்த்தபடி வலம் வருகிறோம். – இரா.முருகன்
அந்நியர்களின் கண்கள் வழியே விரியும் இந்தியாவின் வரலாறு. உலகின் பல மூலைகளிலிருந்து பெருங்கனவோடு புறப்பட்டு வந்து இந்தியாவைக் கண்டும் உணர்ந்தும் வியந்தும் எழுதியவர்களின் கதை. முழுக்க அயலவரின் பார்வையில் இருந்து இந்தியாவின் 2,500 ஆண்டுகால வரலாறு கண்முன் விரிகிறது. பண்டைய கிரேக்கர்களின் இந்தியா, சீன பௌத்தர்களின் இந்தியா, ஐரோப்பியர்களின் இந்தியா மூன்றும் இடம்பெற்றுள்ளன. மெகஸ்தனிஸ், அலெக்சாண்டர், பாஹியான், யுவான் சுவாங், அல்பெரூனி, மார்கோ போலோ, இபின் பதூதா என்று தொடங்கி பலர் நம்மோடு உரையாடுகிறார்கள். நம் நிலம், நம் கடல், நம் கடவுள், நம் வாழ்க்கை, நம் சாதி, நம் வழிபாடு, நம் நம்பிக்கை, நம் மூடநம்பிக்கை, நம் தத்துவம், நம் போர், நம் காதல், நம் இலக்கியம், நம் கனவு என்று அனைத்தையும் ஆராய்கிறார்கள். ஜூனியர் விகடனில் வெளிவந்து கவனம் பெற்ற தொடரின் நூலாக்கம்.
இந்தியத் துணைக்கண்டத்தைச் சேர்ந்த முஸ்லிம் சமூகங்கள் பற்றிய ஒரு பருந்துப் பார்வை. 20ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சைய்யத் அகமது கான், முகம்மது இக்பால், முகம்மது அலி, பசுலுல் ஹக், முகம்மது அலி ஜின்னா, அபுல் கலாம் ஆசாத், லியாகத் அலி கான், ஜாகிர் ஹுசைன் ஆகிய எட்டு ஆளுமைகள் பற்றிய விரிவான சித்திரங்கள் இதில் அடங்கியுள்ளன. இந்தச் சித்திரங்களின் ஊடாக இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த முஸ்லிம் சமூகங்கள் குறித்த மிக விரிவான, மிக ஆழமான ஓர் அறிமுகம் நமக்குக் கிடைக்கிறது. இந்தியப் பிரிவினை தவிர்க்கவியலாததா? அதற்கு யார் காரணம்? பிரிவினையைத் தொடர்ந்து இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் ஓடிய ரத்த ஆற்றைத் தடுத்திருக்க முடியுமா? இஸ்லாமியர்களுக்கென்று ஒரு தனி நாடுஅமைக்கவேண்டும் என்பதுதான் ஜின்னாவின் மெய்யான நோக்கமா? இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் நல்லுறவு சாத்தியமா? இன்றும் பெரும் தாக்கம் செலுத்தும், பலத்த விவாதங்களைக் கிளப்பும் முக்கியக் கேள்விகளுக்கு ராஜ்மோகன் காந்தி விரிவான விடைகளை அளிக்கிறார். வரலாற்றிலிருந்து நாம் கற்கவேண்டிய சில முக்கியமான பாடங்களையும் அவர் நம்மோடு பகிர்ந்துகொள்கிறார். ராஜ்மோகன் காந்தியின் Understanding the Muslim Mind நூலின் அதிகாரபூர்வமான தமிழாக்கம் இது,