இலக்கியத்திற்காக நோபல் பரிசுபெற்ற ( 1930 ) அமெரிக்க எழுத்தாளரான சின்க்ளேர் லூயிஸ் எழுதி 1935 ஆம் ஆண்டு வெளியான ஆங்கில நாவல் . அதை , தேர்ந்த மொழிபெயர்ப்பாளளரான கி . இலக்குவன் தமிழில் தந்துள்ளார் . முசோலினியும் , ஹிட்லரும் அதிகாரத்திற்கு வந்து ஐரோப்பா வதைப்பட்டபோது அமெரிக்காவில் அதுபோலெல்லாம் நடக்காது எனும் பேச்சுகளுக்கு மத்தியில் 1936 இல் ஒரு ஃபாசிஸ்ட் அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்படுவதாக விரியும் நாவல் . இன்றைய அமெரிக்க , இந்திய நிலைகளுக்கும் பொருத்தப்பாடு கொண்ட நாவல் .
மூன்று பெண்கள் , மூன்று தலைமுறைகள் , மூன்று உலகங்களைக் கோத்துப் பின்னப்பட்ட கதை இது . பால்யத்தில் விதவையாக்கப்பட்ட அத்தையம்மாவுக்கு அவரிடமிருந்து பறிக்கப்பட்ட இளமைகாலக் கனவுகள் , ஆசைகள் இவற்றின் இடத்தை அவர் வைத்துக்கொண்டிருக்கும் நகைகளின் மதிப்பு அளித்துள்ள அதிகாரம் ஈடுசெய்கிறது . மரணத்திற்குப் பிறகும் அவரது ஆசைகள் மடிவதில்லை ; மணமாகி அக்குடும்பத்துக்குள் வரும் மருமகளிடம் நகைப்பெட்டியை ஓப்படைத்த பின்பும் நகைகள்மீது அவருக்கிருக்கும் பிடிப்பு போய்விடவில்லை . அவரது ஆவி அவளைக் கண்காணித்தபடியே இருக்கிறது . எளிய குடும்பத்திலிருந்து வரும் மருமகளுக்குத் தனது துணையைத் தேர்வுசெய்யும் உரிமை இருக்கவில்லை என்றாலும் , தானும் தடுமாறிக்கொண்டிருக்கும் தனது குடும்பமும் செல்லவேண்டிய பாதையை முடிவுசெய்யும் துணிச்சலை நகைப்பெட்டி அளிக்கிறது . மூன்றாவது தலைமுறைக்காரியான அவளது மகளுக்குத் தனக்கான இலக்கையும் வாழ்க்கையையும் அமைத்துக்கொள்ளும் சுதந்திரம் கிடைத்துவிடுகிறது . நகைப்பெட்டிக்கு அவளிடம் வேலையில்லை . அத்தையம்மாவின் ஆசைகள் இவள்மூலமாக நிறைவேறுகிறதா ? இயல்பான மொழியில் உயிரோட்டமான நடையில் ஒரு மர்மக்கதையின் விறுவிறுப்புடன் புனையப்பட்டிருக்கிறது இந்தக் குறுநாவல் ,
இந்தக்கதை நான்அறிந்த மெய்யான ஒரு வாழ்க்கையின் புனைவு வடிவம் . அந்த வாழ்க்கையின் உச்சநிலைகள் வழியாக மட்டுமே செல்லும் கதை . எழுச்சியும் சரிவும் உச்சநிலையிலேயே நிகழ்கின்றன . நுரைக்காத தருணமே இல்லாத கதை , பின்னணியாக அமைந்தது சினிமா என்னும் கனவு . அதிலும் கறுப்புவெள்ளை சினிமா என்பது தூய கனவு . கனவின் எழில்கொண்ட ஒரு கற்பனாவாதப் படைப்பு இது . ஒரு காதல்கதை . இழந்த காதலின்அல்லது இழக்க முடியாத காதலின் கதை .