வாரணாவதம் துரியோதனன் பார்வையில் மகாபாரதம். இதிகாசங்களும் புராணங்களும் காற்று, கடல், ஆகாயம் போல் அனைவருக்குமானவை. அவற்றுக்கு எல்லைகள் வகுக்க இயலாது. எந்தக் கோணத்திலிருந்தும் அணுகலாம். எப்படி வேண்டுமானாலும் மறுவாசிப்பு செய்யலாம். எவ்வளவு நட்சத்திரங்கள் இருக்கின்றனவோ அவ்வளவு விதங்களில் அர்த்தப்படுத்திக்கொள்ளலாம். மகாபாரதத்தை யாருடைய பார்வையிலிருந்தும் விரித்தெடுக்கலாம். நன்மை தீமை, தர்மம் அதர்மம், நாயகன் வில்லன் ஆகிய இருமைகளைக் கொண்டு மகாபாரதத்தை அணுகுவது ஒரு முறை என்றால் இந்த மதிப்பீடுகளிலிருந்து விலகி, எதிர் நிலையிலிருந்து அதன் கதையைச் சொல்லத் தொடங்குவது இன்னொரு முறை. இந்நாவலில் மகாபாரதம் துரியோதனின் கோணத்திலிருந்து விரிகிறது. கறுப்பும் வெள்ளையும் கலந்து வியாசர் உருவாக்கிய துரியோதனனை இருள் மனிதனாக மட்டும் சுருக்கிக் காணவேண்டியதில்லை என்று வாதிடும் இந்நாவல் ஒரு புதிய தேடலைத் தொடங்கி வைப்பதோடு நமக்கு நன்கு பரிச்சயமான கோணங்களையும் நிகழ்வுகளையும் புதிய நோக்கில் மறுஆய்வுக்கு உட்படுத்துகிறது. முற்றிலும் புதிய, வண்ணமயமான ஒரு மகாபாரதத்தை வாசிக்கத் தயாராகுங்கள்.