சமகாலத்துப் படைப்பாளிகளில் வாசகனுக்கு நிறைவளிக்கும் மிகச்சில எழுத்தாளர்களுள் கார்த்திக் பாலசுப்ரமணியனும் ஒருவர் . இவரின் கதைகளில் ஒரே வகையான களத்தையோ சித்திரிப்பையோ காண இயனது . இவர் புதிய அழகியல் அம்சங்களுக்காகவோ வெறும் படிமங்களுக்காகவோ அல்லது மிகை புனைவுக்காகவோ முனைந்துபார்க்கும் எல்லைக்கு வெளியே அமர்ந்திருக்கிறார் . யதார்த்தச் சித்திரிப்புகளின் மூலம் நித்திய மதிப்புமிக்க விடுகிறார் . கதைகளை எழுதவல்லவராக மினிர்கிறார் . மிக எளிமையானதொரு கதைக்களத்தில் ஊடுருவித் துல்லியமான படைப்பை மொழிக்குக் கையளித்து தனது கதையலகின் அலங்காரமற்ற நேரடித்தன்மையையும் , படைப்பின் மொத்த ஆகிருதியை வாசகனுக்கு காட்டிவிடத் துடிக்காத நுட்பத்தையும் , பொறுமையையும் மகத்துவமான எழுத்தாளர் அசோகமித்திரனிடம் இருந்தே காாததிக் பாலசுப்ரமணியன் பெற்றுக்கொள்கிறார் எனக்கருதுகிறேன் . ‘ ஓளிரும் பிரகாசிக்கட்டும் பச்சைக் கண்கள் புத்தாற்றலும் உத்வேகமும் கொண்டதொரு தலைமுறையின அர்த்தபூர்வமானதும் அடர்த்திமிக்கதுமான பிரதி . மொழியும் படைப்பாளனும் – அகரமுதல்வன்
பத்தொன்பதாம் நூற்றாண்டு பிரிட்டிஷ் இந்தியாவில் , கோடை மலையின் உள்ளடங்கியதொரு பகுதியில் தனித்திருக்கும் கிருத்துவ தேவாலயம் ஒன்றில் நடக்கும் இரகசியமான ஆராய்ச்சியையும் அதைப் பற்றி எழுதப்படும் குறிப்புகள் அடங்கிய பிரதி விந்தையான வகையில் மறைந்து போவதையும் பின்னணியாகக் கொண்டு எழுதப்பட்டிருக்கும் இக்கதை அறிவைச் சேகரித்துத் தொகுப்பதன் பின்ளிருக்கும் மறைமுகமான அதிகாரம் , அரசியல் ஆகியவற்றையும் கோடிட்டுக் காட்டுகிறது . தனித்துவமான கற்பனைகளைத் திருட்டிற்குப் பலி கொடுத்த ஒருத்தி . பிறரது சிந்தனைகளைத் திருடும் மேற்கத்திய மருத்துவனைத் தடுக்க . தன் வரலாற்றை இழந்த ஒருவனோடு , தனது பால்ய களவுகளைத் தவறவிட்ட கன்னியாஸ்திரியையும் கூட்டுசேர்த்துக்கொண்டு . பூரணமாகக் கட்டி முடிக்கப்படாத கட்டிடத்திற்குள் . முழுவதுமாய் எழுதி முடிக்கப்படாத நூலைத் தேடி அலைகிறான் . வழக்கமான நேர்க்கோட்டு விவரிப்பு முறையினின்றும் விலகி உள்ளடுக்குகள் கொண்ட மலரொன்று அலர்வதைப் போல நிதானமாக விரியும் இச் சிறு நாவல் நிறைவானதொரு வாசிப்பு அனுபவத்தை நல்குகிறது . மோகனரங்கன்
1943-1983 கால அளவில் , ‘ கிராம ஊழியன் ‘ முதல் ‘ அமுதசுரபி ‘ இதழ் முடிய கரிச்சான் குஞ்சு எழுதிய தொண்ணூற்றொன்பது சிறுகதைகளின் காலவரிசைத் தொகுப்பாக இந்நூல் வெளிவருகின்றது . பல்வேறு பழைய இதழ்களிலிருந்து புதிதாகக் கண்டறியப்பட்ட இருபத்தைந்து சிறுகதைகள் முதன்முறையாக நூல்வடிவில் பிரசுரம் பெறுகின்றன .
வாழ்வின் தீர்மானிக்க முடியாத கணங்களால் உருவான உணர்ச்சிகளே இக்கதைகள் . லெளகீக வாழ்வின் அபத்தங்களைக் காட்டும் மாய வித்தைக்காரனாகவும் , சிறுகதைகளின் சூட்சுமங்களை வெளிப்படுத்திய கலைஞனாகவும் கரிச்சான் குஞ்சு அடைந்த வெற்றியின் சான்று இச்சிறுகதைத் தொகுப்பு .
இசையுலகத்திற்கு உள்ளும் வெளியிலும் நிகழ்ந்துவரும் பல்வேறு விவாதங்கள் , எழுப்பப்படும் கேள்விகள் ஆகியவை முதல்முறையாக இந்த நூலில்தான் விரிவாக விவாதிக்கப்பட்டிருக்கின்றன . இசையுலகினுள் நிலவும் சாதி , பாலினம் , மொழி , மதம் சார்ந்த பாகுபாடுகளைப் பிரச்சனைப்படுத்தி விவாதிக்கிறார் கிருஷ்ணா . வாய்ப்பாட்டுக் கலைஞர்களுக்கும் பிற கலைஞர்களுக்கும் இடையே இருக்கும் படிநிலைகள் , கச்சேரிக்கான கட்டமைப்பு , பாடல்களின் தேர்வு ஆகியவற்றையும் கிருஷ்ணா கேள்விக்கு உட்படுத்துகிறார் . கலை வடிவின் நோக்கம் அதன் வெளிப்பாட்டுடன் கொண்டிருக்கும் உறவை முன்வைத்து இசையின் பல கூறுகளை விவரிக்கிறார் . இசைக்கும் இறைமை நிகழ்களம் ஆகியவற்றிற்கும் இடையிலான உறவுகளையும் நுணுக்கமாக ஆராய்கிறார் . கர்னாடக , இந்துஸ்தானி இசை வடிவங்களை ஒப்பிட்டு விவாதிக்கிறார் . நாட்டியத்திற்கும் இசைக்குமான உறவைப் பற்றியும் பேசுகிறார் . இசை வரலாறு குறித்த சுருக்கமான சித்திரத்தையும் தீட்டியிருக்கிறார் . கிருஷ்ணாவின் சிந்தனைகளையும் கருத்துகளையும் ஒருவர் நிராகரிக்கலாம் . ஆனால் அவருடைய ஆழ்ந்த அக்கறையையும் உழைப்பையும் மறுக்க முடியாது . அவற்றை முன்வைப்பதில் அவர் கைக்கொள்ளும் அறிவார்த்தமான முறையியலை மதிக்காமல் இருக்க முடியாது . இந்த நூலின் ஆகப்பெரிய வலிமை இதுதான் .
ஈடுகட்ட முடியாத இழப்பின் பிடியில் சிக்கித் தவிக்கும் அரசு அதிகாரியான சந்திரன் அஸ்ஸாமில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட இன்ஜினீயர் ஒருவரை மீட்கும் பணியில் முனைந்து ஈடுபடும்போது சந்திக்கும் பலவிதமான மனிதர்கள் தமிழ்ப் புதின உலகுக்குப் புதிய பரிமாணங்களைச் சேர்க்கிறார்கள் . கடத்தல் தொடர்பான பேச்சுவார்த்தை உச்சத்தை அடையும் தருவாயில் சந்திரன் தன் நிறுவனத்தில் நடந்த பெரிய ஊழலைக் கண்டுபிடிக்கிறான் . அதனால் தனக்கு ஏற்படும் சிக்கல்களையும் கடத்தல் நாடகம் எவ்வாறு முடிவுறுகிறது என்பதைப் பற்றியும் நாவல் எழுத முனைகிறான் . பல அடுக்குகள் கொண்ட இந்த நாவல் கதைக்கும் அதை எழுதுபவனுக்கும் உள்ள எல்லைக்கோட்டை மாறி மாறிக் கடக்கிறது . சந்திரனின் மனைவி சுகன்யாவுக்கும் அவன் நண்பர்களுக்கும் இடையிலான கடிதப் பரிவர்த்தனையில் உண்மையின் பல சாயல்கள் இயல்பாக வெளிப்படுகின்றன .
தாய்மொழியிலும் ஆங்கிலத்திலும் திறம்பட எழுதும் மிகச் சில இந்திய எழுத்தாளர்களில் ஒருவரான பி . ஏ . கிருஷ்ணன் தன் முதல் நாவலான The Tiger Claw Tree ஐத் தமிழில் புலிநகக் கொன்றை எனப் படைத்தார் . பரவலான கவனத்தையும் பாராட்டையும் பெற்ற அப்படைப்புக்குப் பின் கலங்கிய நதி கிருஷ்ணனின் இரண்டாம் புதினமான The Muddy River இன் தமிழ் வடிவமாக வெளிவருகிறது .
யாழ்ப்பாணக் கச்சேரியடியில் ‘ இவ்விடத்தில் துப்பாதீர்கள் ’ என்று அறிவிப்பு எழுதிவைத்தால் ‘ எந்த மானமுள்ள யாழ்ப்பாணத்தானும் துப்பத்தான் செய்வான் ‘ என்று எழுதும் எள்ளலும் தள்ளலும் கொண்ட இவருடைய தமிழ் எழுத்துக்காகவே கலைத்துப் பிடித்து நட்பானேன் .
சச்சிதானந்தன் சுகிர்தராஜா வள்ளுவன் குறிப்பிட்ட நுண் மான் – நுழை புலம் . தான் சார்ந்த துறையில் பெரிய ஆளுமை . இவர் துறைசார்ந்த அறிஞர்கள் அறிந்த பெருந்தகை . வாழையடி வாழையாக வரும் இலங்கைப் புலமை மரபில் வரும் இவர் மற்ற புலமையாளர்களைப் போல் தான் சொல்லவாற விடயத்தை முறைத்தபடியோ விறைத்தபடியோ சொல்லாமல் சிரித்துக்கொண்டு உறைக்கச் சொல்லும் எள்ளல் ததும்பும் புதுநடைக்குச் சொந்தக்காரர் .
சூழலியல் சார்ந்த அக்கறைகள் , தில்லி அரசியலின் குறுக்குவெட்டுப் பார்வை , பெருநகரத்து மனிதர்களின் உள்ளீடற்ற போலியான வாழ்க்கை , புதிய அரசியல் மற்றும் சமூக இயக்கங்களின் மீது நடுத்தர வர்க்கத்து மனிதர்கள் கொள்ளும் எதிர்பார்ப்பு , ஏதோ ஒரு வகையில் எளிமையான தின் மீதும் இயல்பானதின் மீதும் ஒவ்வொரு மனிதனுக்குள் இருக்கும் பற்றுறுதியும் அது தரும் எதிர்காலத்தின் மீதான நம்பிக்கையுமே ‘ காகித மலர்கள் ’ நமக்கு அளிக்கும் சித்திரம் . இந்தச் சித்திரமே இந்த நாவலை இன்றைய சூழலில் அவசியம் வாசிக்க வேண்டிய படைப்பாக்குகிறது .
வைக்கம் முகம்மது பஷீரின் அச்சில் வெளியான முதல் நாவல் ‘ காதல் கடிதம் ” . 1943 இல் வெளியானது . ஒரு ‘ தமாஷான கதை ‘ என்று எழுதியவரே குறிப்பிட்டாலும் இது வேடிக்கையான கதை மட்டுமல்ல . எழுதப்பட்ட காலத்தின் சமூகப் பழக்கத்தை என்ளி நகையாடவும் காதலின் சிக்கலைப் பேசவும் காதலர்களின் சாதுரியங்களைப் பேசவும் செய்கிறது . பிற்காலத்தில் பஷீர் எழுதிய படைப்புகளின் ஆதார குணங்கள் இந்தத் தொடக்க கால நாவலிலேயே புலப்படுகின்றன . அநாயாசமாகச் செல்லும் கதையாடல் , தனித்துவமான மொழி , கதாபாத்திரச் சித்தரிப்பில் மறைந்திருக்கும் நுட்பம் ஆகிய இயல்புகள் இந்தப் புனைவை முக்கியமானதாக்குகின்றன . எழுதப்பட்டு முக்கால் நூற்றாண்டுக் காலத்துக்குப் பின்பும் வாசிப்புக்கு உகந்ததாகவும் காலத்துக்குப் பொருந்தியதாகவும் இந்த நாவல் நிலைபெற்றிருப்பது பஷீரின் மேதைமையால் மட்டுமே . காலம் பஷீரைக் கடந்து செல்லவில்லை . மாறாக பஷீர் காலத்தைத் தாண்டிச் செல்கிறார் என்பதை ‘ காதல் கடிதம் ’ உறுதிப்படுத்துகிறது .
” குழந்தைகள் .. ? ” என்னும் கேள்விக்கு ” இல்லை ” என்று சொல்லி மெல்லியதாகப் புன்னகைக்கும் பெண்கள் பலரைப் பார்த்திருப்போம் . அந்தப் புன்னகைக்குப் பின்னால் இருக்கும் வலி அவர்கள் மட்டுமே உணரக்கூடியது . குழந்தைக்கான தனிப்பட்ட ஏக்கம் ஒருபுறமிருக்க , குழந்தையின்மையால் குடும்பத்திலும் சமூகத்திலும் ஆண்மை / பெண்மை மீது சுமத்தப்படும் அவமானங்கள் இந்த வலியைப் பல மடங்காகப் பெருக்கக்கூடியவை . குழந்தைப் பேற்றுக்கான சிகிச்சைகள் தரும் உடல் , மன உலைச்சல்களின் சொல்லொணாத வேதனைகள் தனிக்கதை .
குழந்தையின்மை தரும் வலி குறித்துப் பொதுச் சமூகம் அதிகம் அறிந்திராத பல பரிமாணங்களை அனுபவங்களாக வாசகருக்குத் தருகிறது காயாம்பூ . மனவெளியிலும் புற உலகிலும் நந்தினி மேற்கொள்ளும் துயரார்ந்த பயணங்களின் தடங்களைச் சுமந்தபடி புனைவு வெளியில் சலனம் கொள்கிறது அது . நுண்ணுணர்வு மிகுந்த சித்திரிப்புடன் , பிறர்மீது புகார்களை அடுக்காத பக்குவத்துடன் காயாம்பூவின் நிறத்தையும் மணத்தையும் அதன் இழைகளையும் சித்திரித்திருக்கிறார் லாவண்யா .
படைப்பில் வெளிப்படும் அனுபவங்களை வாழ்ந்து பெற்றதுபோன்ற உணர்வைத் தருவது வலுவான புனைவெழுத்தின் கூறுகளில் ஒன்று . ‘ காயாம்பூ ‘ அத்தகைய ஒரு படைப்பு .