மலைநாட்டுத் தமிழர் என்றெல்லாம் அழைக்கப்படும் இவர்கள் அப்போது ‘சிலோன்’ என்றழைக்கப்பட்ட இலங்கைக்கு 19ம், 20ம் நூற்றாண்டுகளில் கோப்பி தோட்டங்களிலும் பின்னர் தேயிலை, ரப்பர் தோட்டங்களிலும் வேலை செய்வதற்காக தென்னிந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்டவர்களின் சந்ததியினராவர். இவர்களில் சிலர் வர்த்தகர்களாவும் ஏனைய சேவைகள் வழங்குவோராகவும் சுயமாக வந்தவர்கள். இலங்கை நாட்டின் தொழிலாளர் வர்க்கத்தினரிடையே மிகவும் சுரண்டப்படுகின்ற,துன்புறுத்தப்படுகின்ற மக்கள் பிரிவினர் இவர்களே என்பதை இந்நூல் உணர்த்தும். இலங்கை நாட்டின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாகத் திகழ்ந்தவர்கள் மலையகத் தமிழர்கள். ஆனால் இந்திய விஸ்த்தரிப்பின் மறைவான பாதங்கள் என இலங்கையின் தீவிர பேரினவாதிகளால் அவர்கள் முத்திரைக் குத்தப்பட்டனர். மலையகத் தமிழர் தமது வரலாறு முழுவதும் எவ்வாறு அரசாங்கங்களால் நடத்தப்பட்டுள்ளார்கள் என்பதை சொல்வதே இந்த நூலின் நோக்கமாகும்.
இலங்கையின் இன்றைய பொருளாதார, அரசியல், சமூக நெருக்கடிகள் திடீரென நிகழ்ந்ததொன்றல்ல. இந்த நிலைக்கான அடிப்படைக் காரணிகளை வரலாற்று வழியிலும், விடப்பட்ட, விடப்பட்டுவரும் தவறுகளை தெளிவாக விளங்கிக்கொண்டும், இந்த கைசேத நிலையிலிருந்து மீட்சிபெற சிந்திக்கவுமான தேவையே இன்றைய இலங்கையின் வீழ்ச்சி நிலையை குறைந்த பட்சமாவது சீர்படுத்தி முன் கொண்டு செல்ல துணை புரியும். இந்த முக்கியமான பணியில் இதன் பல்வேறு அடிப்படைகளை விளங்கிக்கொள்வதற்கு, தமிழில் இந்த நூல் ஆக்கபூர்வமான பங்களிப்பாக இருக்கும்.
இலங்கையின் இன்றைய பொருளாதார திவால் நிலைக்கு, பல தசாப்தங்களாக நீடித்து வருகின்ற இன ரீதியான அரசியல் பிரச்சினைகளும், அசமத்துவ நிலையும் ஒரு பிரதான காரணமாகும். நாட்டின் பெருமளவு வளத்தை, சொந்த நாட்டு மக்களின் அடிப்படை அரசியல் உரிமைகளை வழங்க மறுத்து, அம்மக்களை அழிப்பதற்கும், அடக்கி ஒடுக்கி வைப்பதற்குமே அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்த சிங்கள ஆட்சியாளர்கள் வீணாக்கி வந்துள்ளனர்.
இலங்கை தமிழ்ச் சூழலில், பொருளாதாரத்துறை சார்ந்த கல்வியலாளர்களும் ஆய்வாளர்களும் உள்ளனர். ஆனால் அரசியல், சமூகவியல் துறை சார்ந்த அறிவுடன், இலங்கையின் பொருளாதார அடிப்படைகளையும் பொருளாதார வீழ்ச்சிக்கான காரணிகளையும், பொருளாதாரத்துறை சார்ந்த கல்விப்புலத்துடனும், அறிவுடனும் எழுத இயலுமானவர்கள் ஒரு சிலரே உள்ளனர். அவர்களில் ஒருவர்தான் இந்த நூலின் ஆசிரியர் தோழர் அ. வரதராஜா பெருமாள். கிட்டத்தட்ட 50 வருடங்களாக இத்துறைகள் சார்ந்த ஈடுபாடும் தேடலும் அறிவும் அவருக்குள்ளது.
இலங்கையின் இன்றைய நிலையை அனைத்து தளங்களிலும் சீர்படுத்துவதற்கான பங்களிப்பினை செய்ய வேண்டிய பொறுப்பு அனைத்து சமூக, ஜனநாயக சக்திகள் முன் உள்ளது! இந்த அவசியத் தேவைக்கான சிந்தனையும், பொருளாதார அரசியல் பாடத்தினையும் தருவதற்கான அம்சங்களையும் உள்ளடக்கமாக கொண்டுள்ளது இந்த நூலின் இன்னொரு முக்கியத்துவமாகும்.