பிரிட்டிஷ் காலனியாதிக்கத்தின்மூலம் இந்தியாவுக்குக் கிடைத்துள்ள நன்மைகளை வியந்தோதும் நூல்கள் நம்மிடம் ஏராளம் உள்ளன . அவற்றில் பலவற்றை இந்தியர்களே எழுதியும் இருக்கிறார்கள் . ஆனால் காலனியாதிக்கம் இந்தியாவை எப்படிச் சீரழித்தது என்பதையும் எப்படி இந்தத் தேசத்தைப் பின்னோக்கி இழுத்துச் சென்றது என்பதையும் விரிவாக அறிமுகப்படுத்தும் நூல்கள் அரிதாகவே எழுதப்பட்டுள்ளன .
சசி தரூரின் இந்தப் புத்தகம் அந்தக் குறையைத் தீர்த்துவைத்திருக் கிறது . ஏராளமான வரலாற்றுத் தரவுகளையும் நியாயமான வாதங் களையும் முன்வைத்து எழுதப்பட்டிருக்கும் இந்நூல் பிரிட்டிஷ் காலனியாதிக்கம் இந்தியாவின் இருண்ட காலம்தான் என்பதைச் சந்தேகத்துக்கு இடமின்றி நிறுவுகிறது .
தவிரவும் , காலம் காலமாகச் சொல்லப்பட்டுவரும் பல கற்பிதங் களையும் தகர்த்தெறிகிறது . பின்தங்கியிருந்த இந்தியாவுக்கு நாகரிகத்தை அறிமுகப்படுத்தியது பிரிட்டிஷ் பேரரசுதான் என்பதையும் ஆங்கில மொழி , ரயில்வே , நாடாளுமன்ற ஜனநாயகம் , சுதந்தர ஊடகம் ஆகியவற்றை இந்தியர்களின் நலனுக்காகவே பிரிட்டன் அறிமுகப்படுத்தியது என்பதையும் தரூர் ஏற்கமறுக்கிறார் .
பிரிட்டிஷார் இந்தியாவுக்கு இழைத்த அநீதியைத் தகுந்த சான்றாதாரங்களுடன் அம்பலப்படுத்தும் இந்நூலை ஒவ்வொரு இந்தியரும் வாசிக்கவேண்டியது அவசியம் . நம் கடந்த காலம் குறித்த பிழையான அல்லது குறையான புரிதலைக் களைய உதவும் ஒரு முக்கியமான ஆவணம் இது .
ஆங்கிலத்தில் வெளிவந்து மிகுந்த வரவேற்பையும் பாராட்டுதல் களையும் பெற்றிருக்கும் An Era of Darkness நூலின் அதிகாரபூர்வமான மொழிபெயர்ப்பு .
மனித குலம் அறிந்திராத பயங்கரங்களை , குரூரங்களை அநாயசமாக நிகழ்த்திக்காட்டியது இரண்டாம் உலகப் போர் . உயிரிழப்பு , அறுபது மில்லியன் முதல் எழுபது மில்லியன் வரை . போரின் மையம் ஐரோப்பா என்றாலும் அது ஏற்படுத்திய பேரழிவும் நாசமும் ஆசியா , அமெரிக்கா , ஆப்பிரிக்கா என்று பரவி கிட்டத்தட்ட உலகம் முழுவதையும் உலுக்கியெடுத்தது .
சிலருக்கு இது ஆக்கிரமிப்புப் போர் . சிலருக்குத் தற்காப்பு யுத்தம் . சிலருக்கு பழிவாங்கல் . சிலருக்கு விடுதலைப் போர் . இன்னும் சிலருக்கு , இது ஒரு லாபம் கொழிக்கும் வியாபாரம் . ஹிட்லரோடு தொடங்கி ஹிட்லரோடு முடிந்துவிட்ட போர் அல்ல இது . திடீரென்று ஒரு நாள் வெடித்துவிட்ட யுத்தமும் அல்ல . மிகக் கவனமாகத் தயாரிக்கப்பட்டு , தெளிவாகத் திட்டமிடப்பட்டு , தகுந்த முன்னேற்பாடுகளுடன் நிகழ்த்தப்பட்ட மிருகத்தனம் .
அரசாங்கங்கள் சரிந்தன . புதிய தேசங்கள் உருவாகின . உலக வரைபடம் மாறியது . இன்னும் ஆயிரம் ஆண்டுகள் இந்த ஆட்சி நீடித்திருக்கும் என்று சொன்ன ஹிட்லர் தற்கொலை செய்துகொண்டார் .
அரசியல் , சமூக , வரலாற்றுப் பின்புலத்தில் இரண்டாம் உலகப் போரை விரிவாக விவரித்து , அலசுகிறார் மருதன் .
தொடக்கமே ஒரு துயரக் கதை….. இவர்களை இந்தியாவிலிருந்து வஞ்சகமான முறையில் அழைத்து வந்தபோது, இவர்கள் அனுபவித்த துயரங்கள் அமெரிக்காவுக்கு அடிமைகளாக நீக்ரோக்கள் பிடித்துச் செல்லப்பட்டபோது, அவர்கள் அனுபவித்த துயரங்களுக்கு எவ்விதத்திலும் குறைவானதல்ல. தங்களுடைய கிராமங்களில் இருந்து இராமேஸ்வரத்திற்கும் தட்டைப்பாறைக்கும் (தொண்டிக்கருகில்) வழியெல்லாம் நடந்தே வந்தனர். வழியில் தாம் கொண்டு வந்த உடமைகளை பல சமயங்களில் திருடர்களிடம் பறிகொடுத்து வெறுங்கையோடு, வள்ளங்கள் மூலம் இலங்கைக்கு வந்து சேர்ந்தனர். தலைமன்னாரிலிருந்து அல்லது அரிப்பிலிருந்து, வனாந்தரங்களில், வனவிலங்குகளின் அச்சுறுத்தலுக்கும், மலேரியா நோயின் பயங்கரத்திற்கும் நடுவே அவர்கள் போதிய உணவோ, உடையோ இன்றி பல வாரங்கள் தொடர்ந்து நடந்தனர். அவர்கள் பிரயாணம் செய்த பாதையில் பல இடங்களில், பல மைல் தூரத்திற்கு நீர் கிடைக்காது வழியில் செத்து மடிந்தோரின் சடலங்கள் வனவிலங்குகளுக்கு உணவாக விடப்பட்டன. தாய்மார் இறந்த பல சமயங்களில், அவர்களது கைக்குழந்தைகளும் அவர்களது பிரேதத்தின் அருகே நிராதரவாக விட்டுச் செல்லப்பட்டன……