பண்டைய காலம் முதல் நவீன காலம் வரையிலான தமிழகத்தின்
கதையைப் போர்களின்மூலம் தெரிந்துகொள்ள உதவும் ஒரு
வரலாற்று வழிகாட்டி இந்நூல்.
தலையாலங்கானம், தகடூர், மதுரை, நெல்வேலி, காந்தளூர்ச்
சாலை, பெருவளநல்லூர், திருப்புறம்பியம் என்று அடுத்தடுத்து
பல போர்க்களங்கள் நம் முன்னால் விரிகின்றன. நலங்கிள்ளியும்
நெடுங்கிள்ளியும் நெடுஞ்செழியனும் புலகேசியும் சுந்தரபாண்டியனும் வாளேந்தி
பாய்கிறார்கள்.
யானைகளும் குதிரைகளும் மனிதர்களும் மோதிக்கொள்கிறார்கள். குருதி ஆறாகப் பெருக்கெடுத்து ஓடுகிறது. ஒரு மன்னர் தோற்கிறார்,
இன்னொருவர் வெல்கிறார். இந்த வெற்றிகளும் தோல்விகளும்
தமிழகத்தின் திசைப்போக்கைத் தீர்மானித்திருக்கின்றன. எனவே
போர்களைக் கூடுதல் கவனத்துடன் ஆராயவேண்டியிருக்கிறது.
இந்நூலில்புறநானூறு,அகநானூறு, மதுரைக்காஞ்சி,
நெடுநல்வாடை என்று இலக்கிய ஆதாரங்கள் ஒரு பக்கம்
அணிவகுக்கின்றன என்றால் கல்வெட்டுகள், செப்பேடுகள் என்று
வரலாற்றுத் தரவுகள் இன்னொரு பக்கம் பலம் சேர்க்கின்றன.
சங்க காலம் தொடங்கி ஐரோப்பியரின் வருகைக்குச் சற்று முன்பு
வரையிலான போர்க்களங்களை நம் கண் முன்னால் சிறப்பாகக்
காட்சிப்படுத்தியிருக்கிறார் எஸ். கிருஷ்ணன்.
14ஆம் நூற்றாண்டில் நடந்த முகமதியப் படையெடுப்பை தமிழ்நாடு எவ்வாறு எதிர்கொண்டது? சமணமும் பௌத்தமும் கிட்டத்தட்ட அழிந்திருந்த நிலையில், இந்து மதம் தனது விக்கிரகங்களை எவ்வாறு எதிரிகளின் கரங்களிலிருந்து காப்பாற்றியது? அரங்கம் முதல் தில்லைவரை, மதுரைமுதல் சீர்காழிவரை ஒவ்வொரு விக்கிரகத்தின் பின்னாலும் ஒரு கதை இருக்கிறது. இது தில்லையின் கதை. காணாமல் போன நடேசன் அதிசயத்திலும் அதிசயமாக மீண்டு வந்ததன் பின்னாலுள்ள ஓர் அசாதாரணக் கதை. அனுஷா வெங்கடேஷின் இந்த அபாரமான சரித்திர நாவல் தமிழ் வாசகர்களைக் கொண்டாட்டத்தில் ஆழ்த்தும் என்பது உறுதி.
‘இந்நூல் இன்றைய இளைய தலைமுறையைச் சென்றடைய வேண்டும்.’ – ஜி.ராமகிருஷ்ணன், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர், சிபிஐ(எம்)
கம்யூனிசம் என்றால் என்ன? நம் உலகையும் நாம் எதிர்கொள்ளும் எண்ணற்ற பிரச்சினைகளையும் அது எவ்வாறு அணுகுகிறது? கம்யூனிஸ்டுகள் யார்? பிற கட்சி அரசியல்வாதிகளிடமிருந்து அவர்கள் எவ்வாறு மாறுபடுகின்றனர்? தங்கள் வாழ்க்கைமுறையையும் நெறியையும் அவர்கள் எவ்வாறு வகுத்துக்கொள்கின்றனர்? உழைக்கும் மக்களின் வாழ்வில் அவர்கள் செலுத்திய, செலுத்திவரும் தாக்கம் எத்தகையது? இந்தக் கேள்விகள் முன்பைவிடவும் இன்று தீவிரமும் கூர்மையும் அடைந்துள்ள நிலையில் இந்நூல் வெளிவருவது பொருத்தமானதாகும். கோட்பாடுகளின்மூலம் விளக்குவது ஒரு வகை என்றால் அக்கோட்பாட்டை ஏற்று நடைமுறையில் பின்பற்றிவரும் தோழர்களை அறிமுகப்படுத்துவதன் மூலம் கம்யூனிசத்தை விளக்குவது இன்னொரு வகை. இந்நூல் இதைத்தான் செய்கிறது.
சிங்காரவேலர், ஜீவா, ஈ.எம்.எஸ்., பி. சீனிவாச ராவ், அமீர் ஹைதர் கான், சங்கரய்யா, சுர்ஜித், பி. ராமமூர்த்தி போன்ற தோழர்களின் போராட்ட வாழ்வையும் சமூக, அரசியல் பங்களிப்புகளையும் எளிமையாகவும் செறிவாகவும் இந்நூலில் அறிமுகப்படுத்துகிறார் கி. ரமேஷ். வாழ்க்கைக் குறிப்புகளோடு அவரவர் காலத்து அரசியல், சமூகப் பின்னணியையும் இணைத்து வழங்குவது இந்நூலின் சிறப்பு.
வாரணாவதம் துரியோதனன் பார்வையில் மகாபாரதம். இதிகாசங்களும் புராணங்களும் காற்று, கடல், ஆகாயம் போல் அனைவருக்குமானவை. அவற்றுக்கு எல்லைகள் வகுக்க இயலாது. எந்தக் கோணத்திலிருந்தும் அணுகலாம். எப்படி வேண்டுமானாலும் மறுவாசிப்பு செய்யலாம். எவ்வளவு நட்சத்திரங்கள் இருக்கின்றனவோ அவ்வளவு விதங்களில் அர்த்தப்படுத்திக்கொள்ளலாம். மகாபாரதத்தை யாருடைய பார்வையிலிருந்தும் விரித்தெடுக்கலாம். நன்மை தீமை, தர்மம் அதர்மம், நாயகன் வில்லன் ஆகிய இருமைகளைக் கொண்டு மகாபாரதத்தை அணுகுவது ஒரு முறை என்றால் இந்த மதிப்பீடுகளிலிருந்து விலகி, எதிர் நிலையிலிருந்து அதன் கதையைச் சொல்லத் தொடங்குவது இன்னொரு முறை. இந்நாவலில் மகாபாரதம் துரியோதனின் கோணத்திலிருந்து விரிகிறது. கறுப்பும் வெள்ளையும் கலந்து வியாசர் உருவாக்கிய துரியோதனனை இருள் மனிதனாக மட்டும் சுருக்கிக் காணவேண்டியதில்லை என்று வாதிடும் இந்நாவல் ஒரு புதிய தேடலைத் தொடங்கி வைப்பதோடு நமக்கு நன்கு பரிச்சயமான கோணங்களையும் நிகழ்வுகளையும் புதிய நோக்கில் மறுஆய்வுக்கு உட்படுத்துகிறது. முற்றிலும் புதிய, வண்ணமயமான ஒரு மகாபாரதத்தை வாசிக்கத் தயாராகுங்கள்.
வட சென்னையை ரத்தமும் சதையுமாக நம் கண்முன்னால் கொண்டுவந்து நிறுத்தும் இப்படியொரு வண்ணமயமான நூல் இதுவரை வெளிவந்ததில்லை.
புதைந்துபோன கட்டடங்களையும் மறக்கடிக்கப்பட்ட சின்னங்களையும் தேடிக் கண்டடைந்து அறிமுகப்படுத்துவ-தோடு நின்றுவிடாமல் வட சென்னையின் இதயமாகத் திகழும் அடித்தட்டு மக்களின் வாழ்வியலைப் பதிவு செய்வதன்மூலம் ஒரு புதிய வரலாற்றையும் இந்நூல் படைக்கிறது. மேல்கட்டுமானம் அல்ல, அடித்தளமே வரலாற்றை நிர்ணயிக்கிறது என்பதை அழுத்தந்திருத்தமாகப் பதிவு செய்கிறார் நிவேதிதா லூயிஸ்.
இது ஒரு பயணத்தின் கதை. ஒரு நிலப்பரப்பின் கதை. நம் மண்ணின், நம் மனிதர்களின், நம் மரபுகளின் கதை.
யார் நீ? (இரண்டாம் பதிப்பு) நம் ஆளுமைத் திறன் எப்படிப்பட்டது, நாம் உள்ளுக்குள் என்னவாகக் கட்டமைக்கப்பட்டிருக்கிறோம் என்பது பற்றிய தெளிவான புரிதலை நாம் ஒவ்வொருவரும் பெற்றிருப்பது அவசியம். நாம் யார் என்பதைத் தெரிந்துகொண்டால்தான் நாம் விரும்பும் மாற்றம் நமக்குள் நிகழும். ஒருவருடைய பர்சனாலிட்டியைத் தெரிந்துகொள்ள MBTI, TA, 16 PF, எனியகிராம் உள்ளிட்ட செயல்முறைகளை உலகளவில் வெவ்வேறு துறை சார்ந்த நிபுணர்கள் கையாள்கிறார்கள். இவை அறிவியல்பூர்வமானவை. நம்மை நாமே பரிசோதித்துக்கொள்ள பெரிதும் உதவுபவை. இந்நூலில் விவரிக்கப்பட்டுள்ள வழிமுறைகளைப் படிப்படியாகப் பின்பற்றினால் நம் ஒவ்வொருவரின் பர்சனாலிட்டி டைப் என்ன என்பதைக் கண்டுபிடிக்கலாம். இது தன்னையும் மற்றவர்களையும் புரிந்துகொள்ள உதவுகிறது. கண்டுபிடித்து முடித்த பிறகு, நாம் என்ன மாதிரியான மாற்றங்களையும் திருத்தங்களையும் நம் குணாதிசயங்களில் கொண்டுவர விரும்புகிறோமோ அவற்றை மேற்கொள்ள ஆரம்பிக்கலாம். விரிவான வாசிப்பையும் நீண்ட ஆய்வையும் இணைத்து இந்த விலை மதிப்பற்ற உளவியல் கையேட்டை உருவாக்கியிருக்கிறார் சோம. வள்ளியப்பன். இது ஒரு புது வரவு மட்டுமல்ல, புரட்சிகரமான வரவும்கூட.
இந்நூலில் ஜெயமோகன் தன் இணையதளத்தில் எழுதிய பகடிக் கட்டுரைகள் , நகைச்சுவைச் சித்தரிப்புகள் உள்ளன . இவை வழக்கம்போல அன்றாட நிகழ்வுகளைக்கொண்டு எளிய வேடிக்கையை முன்வைப்பவை அல்ல . பல கட்டுரைகளில் நுட்பமான மானுடச் சித்திரங்கள் உள்ளன . தத்துவதரிசனங்கள் தலைகீழாக்கப்பட்டுள்ளன . கேலிக்கு ஆளாவது எது என சற்று யோசிக்கும் வாசகர்களுக்குரிய நுட்பமான நகைச்சுவை எழுத்து இது .