இங்கும் ஒரு மாமனும் மாமியும் இருக்கிறார்கள் . தாழ்வாரத்திலுள் பெண்பிள்ளைகளுக்கு அவர்களும் ஒவ்வொரு வகை பூக்களின் பெயர்களைச் சூட்டியுள்ளார்கள் . கண்ணும் காதும் விளங்காதவர்கள் ; கை கால்கள் துவண்டு போனவர்கள் , தேவையான அளவுக்கு புத்தி உறைக்காதவர்கள் . ஏதோவொரு அநாதை விடுதியிலிருந்து குதிரை வண்டியில் விடியற்காலையில் வந்து சேர்பவர்கள் . அவர்களுக்கிடையில் அமர்ந்திருக்கும்போது எல்லா உறுப்புகளும் தேவைக்கு அதிகமாகவே இருக்கிறதே என்னும் இறுமாப்பு எண்ணம் எனக்கு ஒருபோதும் தோன்றுவதில்லை அக்கூட்டத்தில் அவர்களைவிடவும் நாள் குறையுள்ளவளாகத்தான் இருக்கிறேன் .
இன்னொரு விஷயத்தை மட்டும் சொல்லி நிறுத்திவிடுகிறேன் . உங்கள் காதம்பரி தோற்றதில்லை ஒருபோதும் தோற்கவும் மாட்டேன் . இங்கிருந்து கிடைக்கும் அறிமுகங்களையும் அங்கிருந்து கிடைத்த சில நல்ல பழக்கங்களையும் வைத்து நான் ஒரு பூக்கடையை எப்போதாவது தொடங்குவேன் வேறொரு ஊரில் வேறொரு தோதில் . அது அனந்தராமன் வம்சத்து பூக்கடையாக இருக்காது . காதம்பரியின் பூக்கடை காதம்பரியினுடையதாக மட்டுமே அது இருக்கும் . வம்சங்களின் கட்டுப்பாடுகள் இல்லாமல் காதம்பரி இழக்க வேண்டியது ஒன்றுமில்லையே ‘
நூறு களிறுகளைப் போரில் கொன்று குவிக்கும் வீரனுக்கும் , எதிரிகளே இல்லையென்னும் மாவீரனுக்கும் , விரிந்து பரந்த ராஜ்ஜியத்தின் அரசனுக்கும் , சட்டிச் சோறு வாங்கிச் சாப்பிட்டுக் காலம் கடத்தும் பரதேசிக்கும் , செல்வத்தில் திளைக்கும் வணிகனுக்கும் , சமன் குலைந்த நடத்தையுடன் இருக்கும் பித்தனுக்கும் நினைவுகள் மட்டுமே பொதுவானவை . ஒவ்வொருவரின் மரணத் தருவாயிலும் அவரவரிடம் மிஞ்சி நிற்கப் போவது எஞ்சிய நினைவுகள்தான் .
ராஜராஜன் என்ற சூரியனுக்கடியில் கரு நிழலென மறைக்கப்பட்டது ராஜேந்திரனின் தன்னொளி . மிகப் பெரும் வெற்றியாளன் . ஆனால் , எப்போதும் தோல்வியின் கசப்புடன் வாழவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டவன் . ராஜேந்திரனின் துயர நினைவுகளின் வேர் தேடிச் செல்லும் பயணமே இந்த ‘ கங்காபுரம் ‘ நாவல் .
இந்திய விடுதலைப் போராட்டத்தின் தியாகச் சரித்திரத்தைத் தொடங்கி வைத்த பெருமை கொண்டது தென்தமிழகம் . வீரம் நிரம்பிய அதன் ரத்தச் சரித்திரத்தின் துவக்கப் புள்ளியாய் இருந்த புலித்தேவன் , வீரபாண்டிய கட்ட பொம்மு , ஊமைத் துரை , மருது பாண்டியர்களைத் தொடர்ந்து சிவகங்கை அரசர் வேங்கை பெரிய உடையணத் தேவனும் தன் உயிரைத் துறந்தார் . தங்கள் ஏகாதிபத்தியத்தை எதிர்ப்பவர்களின் நிலை இதுதான் என்று எச்சரிக்கவே பெரிய உடையணத் தேவனையும் போராளிகள் 72 பேரையும் பினாங்கிற்கு ‘ காலா பாணி ‘ என்றழைக்கப்பட்ட நாடு கடத்தலை ஆயுதமாக்கியது ஆங்கில அரசு .
சொந்த மண்ணை , மக்களை , உறவுகளைவிட்டு , கண்காணாத தேசத்திற்கு அரசியல் கைதிகளாக அனுப்பப்பட்ட 73 பேரின் இறுதி அத்தியாயம்தான் ‘ காலா பாணி ‘ . 1801 ஆம் ஆண்டு அக்டோபர் 24 ஆம் தேதி , மருது பாண்டியர் தூக்கிலிடப்பட்டவுடன் , போராளிகளைக் கைது செய்ததில் தொடங்கி , அவர்களின் இறுதிக் காலம் வரையிலான பதினோரு மாதத் துயர நாள்களை , அந்தக் காலத்திற்கே அழைத்துச்சென்று வாசகர்களையும் அத்துயரத்தினை உணரச் செய்யும் மாயத்தைச் செய்துள்ளார் நாவலாசிரியர் டாக்டர் மு.ராஜேந்திரன் இஆப
மாயரகசியத்தைப் புதைந்து வைத்திருக்கும் காலத்தின் யுகாந்திரங்களில் எத்தனையோ ‘ மனிதர்களின் வாழ்க்கைப் புதைந்திருக்கிறது . மனிதர்களாலான வாழ்வு ஒருபோதும் ஒற்றைத்தன்மை கொண்டதாக இருந்ததில்லை . சிலருக்கு வெற்றியும் சாதனைகளின் உயரங்களும் கைகூடி வந்தாலும் , அவை அவர்களின் தகுதியின் உயரங்களைவிட குறைவாகவே இருந்திருக்கிறது . வாழ்க்கைத் தனக்கு அணுக்கமாகச் சிலரை வைத்துக்கொண்டிருக்கிறது . சிலரைத் துயரத்தின் எல்லைவரை விரட்டிச் சென்றிருக்கிறது .
கொள்கையும் அரசியல் சித்தாந்தமும் மனிதகுல நல் வாழ்விற்கான ஆர்வமும் கொண்ட ஒருவன் சுய தேடலோடு வாழ்வைத் தன் அகச்சுடரின் வெளிச்சத்தில் கண்டடையும் பயணத்தின் தொடக்கப் புள்ளியே சாலாம்புரி நாவல் .
இந்திய நிர்வாகவியலின் அடிப்படை கட்டுமானமே ஆட்சிப் பணிதான் . உச்சபட்ச அதிகாரத்துடனும் கவர்ச்சியுடனும் இன்றும் வசீகரித்துக் கொண்டிருக்கும் ஆட்சிப் பணி , அலங்காரமோ , புகழோ நிரம்பியவை மட்டுமல்ல .
ஒவ்வொரு துறையும் அரசு இயந்திரத்தை சுழலச் செய்வதற்காகவும் மக்களின் வாழ்வியலை மேம்படுத்தவும் மட்டுமே என்ற புரிதலில் , முப்பதாண்டு கால ஆட்சிப் பணி அதிகாரியாக இருக்கும் டாக்டர் மு.ராஜேந்திரன் , இஆப நிர்வகித்த பல்வேறு துறைகளைப் பற்றிய அனுபவப் பகிர்வுகளே , செயலே சிறந்த சொல் .
தங்களின் அர்ப்பணிப்பான உணர்வுகளுடன் செயலே சிறந்த சொல்லாக இச்சமூகத்திற்கும் மக்களுக்கும் சேவை செய்த , செய்து சொண்டிருக்கும் , செய்யப்போகும் அதிகாரிகளுக்கான இடத்தை இந்நூல் நினைவுப்படுத்திக் கொண்டிருக்கும் .
புற உலகின் தீட்சண்யங்களில் பொருத்திக் கொள்ள முடியாமல் தன் அகக் கூட்டிற்குள் சுருங்கிக் கொள்ளும் நொய்மையும் தனிமையும் நிராதரவும் கொண்ட மனிதர்களின் பதற்றமான கணங்களைக் கதையாக்குவதில் பி.உஷாதேவி தேர்ந்தவர் .
தமிழிலும் மலையாளத்திலும் எழுதும் உஷாதேவியின் ஆறாவது சிறுகதைத் தொகுப்பு ‘ பிச்சியின் பாடு ‘ .
உள்ளடங்கிய குரலுக்கு வலுசேர்க்கும் , அழுத்தமான துயரத்தின் மொழி இவரின் கதைகளின் தனித்துவமாக இருக்கிறது
இந்திய தாய்க்கும் , ஐரோப்பிய தந்தைக்கும் பிறந்தவர் மதாம் . பிரெஞ்சிந்திய கம்பெனியின் கவர்னராக 12 ஆண்டுகள் ஆட்சிசெய்த துயூப்ளேவின் மனைவி . பிரெஞ்சிந்தியாவின் நிழல் ஆட்சியாளராகக் கோலோச்சியவர் .
மதாம் செய்த லஞ்ச லாவண்யங்களாலும் , ஏசுசபை பாதிரிகளோடு சேர்ந்து அவர் மேற்கொண்ட மதநடவடிக்கைகளாலும் இந்தியா முழுவதையும் பிரெஞ்சுக்காரர்கள் ஆளும் வாய்ப்பு பறிபோனது . ஆங்கிலேயர்கள் இந்தியாவின் ஆட்சியாளர்களாக மாறியதற்கு மதாம் . ஒருவிதத்தில் காரணமானார் .
துயூப்ளே கவர்னராகப் பதவியேற்க கப்பலில் வந்திறங்கியதில் தொடங்கி , பதவி பறிபோய் , குற்றவாளியாகப் பிரான்சுக்குக் கப்பலில் ஏற்றப்படும் வரையிலான காலத்தை நாவலாக்கியிருக்கிறார் டாக்டர் மு.ராஜேந்திரன்