1311 ல் டெல்லி சுல்தான் அலாவுதீன் கில்ஜியின் தளபதி மாலிக் காபூரின் படையெடுப்பின்போது மதுரையில் இருந்து மீனாட்சியம்மனையும் சுந்தரேசரையும் அன்றைய வேணாட்டுக்கு கொண்டுவந்து ஆரல்வாய்மொழி அருகே உள்ள பரகோடி கண்டன் சாஸ்தா ஆலயத்தில் மறைத்து வைத்தனர் என்பது வரலாறு . 1368 வரை மீனாட்சியம்மன் ஆரல்வாய்மொழியில் இருந்தாள் . அங்கிருந்து மீண்டும் மதுரைக்குக் கொண்டு செல்லப்பட்டாள் . அந்த வரலாற்றுப் பின்னணியில் எழுதப்பட்டது இந்நாவல் . ” இது ஒரு மங்கலப்படைப்பு , முற்றிலும் மங்கலம் மட்டுமே கொண்ட ஒன்று ” என்று ஆசிரியர் குறிப்பிடுகிறார் .
உலகச் செவ்வியல் நாவல்களின் தர வரிசைப்பட்டியல் எந்த மொழியில் எவரால் தயாரிக்கப்பட்டிருந்தாலும் அதன் முதல் பத்து இடங்களுக்குள் தவறாமல் இடம் பெறும் மகத்தான தகுதியைப் பெற்றிருப்பது நாவல் பேராசான் ஃபியோதர் தஸ்தயெவ்ஸ்கியின் குற்றமும் தண்டனையும் என்னும் பேரிலக்கியம் .
குற்றம் / தண்டனை ஆகிய இருமைகளைக் குறித்து விரிவான சமூகவியல் உளவியல் பின்னணிகளோடு கூடிய தர்க்கபூர்வமான இரு தரப்பு வாதங்களையும் முன் வைத்து கதைக்கட்டுக்கோப்பு சற்றும் குலையாதவண்ணம் இந்நாவலில் மிக விரிவான ஆழமான ஆராய்ச்சி ஒன்றையே நிகழ்த்தியிருக்கிறார் தஸ்தயெவ்ஸ்கி . ஒரு செயல் எப்போது குற்றமாகிறது … அப்படி அது குற்றம் என்று கருதப்படுமானால் அதற்கான தண்டனை வர வேண்டியது எங்கிருந்து என்பது போன்ற சிந்தனைகளின் பாதிப்புகளால் இந்நாவலின் மெய்யான வாசகர்கள் அலைக்கழிக்கப்படுவதே இந்நாவலின் வெற்றி .
ஒரு மனநிலைச் சித்திரிப்பு , உடனேயே அதற்கு நேர் எதிரான மற்றொரு மனநிலைச் சித்திரிப்பு , மிக எளிமையாகத் துவங்கி அப்படியே தத்துவார்த்தத் தளத்திற்கு உயர்ந்துவிடும் உரையாடல்கள் என்று தீவிரமான மொழிநடையோடும் மொழிநடையோடும் செறிவான கதைப்பின்னலோடும் உருவாகியிருக்கும் இந்தப் படைப்பை இதுவரை இருபத்தாறு உலக மொழிகளில் பெயர்க்கப்பட்டிருக்கும் இந்த நாவலை முதன் முதலாகத் தமிழில் மொழிபெயர்க்க வாய்த்தது நான் செய்த நற்பேறு .
கூகை என்கிற கோட்டான் இடப்பெயர்ச்சியில் ஆர்வமில்லாத பறவை . மிகுந்த வலிமை கொண்டது . எனினும் அந்த வலிமையைத் தன் உணவுக்காக அன்றி வேறு சமயங்களில் பெரிதும் பயன்படுத்துவதில்லை . இருளில் வெளிவந்து உலவும் இயல்புடையது . பகலிலோ அஞ்சி ஒடுங்கித் தன் பொந்துக்குள் கிடக்கும் . கூகையின் தோற்றத்தை அருவருப்பாகப் பார்ப்பதும் , கோரம் என்று முத்திரை குத்துவதும் , கூகையைக் . காணுதலையும் அதன் குரல் ஒலி கேட்பதையும் அபசகுனம் என்று கருதுவதும் இந்தச் சமூகத்தில் பாரம்பரியமாகத் தொடர்ந்துவரும் . பொதுப்புத்தி . கூகையை தலித்துகளுக்கான குறியீடாக்கி , சமகால தலித் வாழ்க்கையைப் படைப்பாக உருவாக்குவதில் பெரும் வெற்றிகண்டிருக்கிறார் சோ . தர்மன் .
கோபல்ல கிராமத்தின் இரண்டாம் பாகமான கோபல்லபுரத்து மக்கள் 34 வாரங்களாக விகடனில் தொடராக வெளிவந்து பல்லாயிரக்கணக்கான வாசகர்களின் வரவேற்பையும் , சாகித்திய அக்காதெமியின் பரிசையும் பெற்றது .
இந்தியா சுதந்திரம் பெற்ற கதையோடு முடியும் இந்நாவலில் , சமகால வரலாற்றுச் சம்பவங்களின் பின்னணியில் சாதாரண மக்கள் நாயகர்களாக விளங்குவதையும் , பிரிட்டிஷ் ஆட்சியை எதிர்த்துக் கிளர்ந்தெழுவதையும் தமக்கேயுரிய தனீ நடையில் சுவை பொங்க விவரிக்கிறார் கி.ரா.
பூமி உருவாவதற்கு முன்பே கோலப்பன் பிறந்து விட்டார் . கோலப்பனின் பிறப்பை அண்டப் பெருவெடிப்பில் நிகழ்ந்த ஒரு பித்தவெடிப்பாகவே நாம் பாவிக்க வேண்டும் . கோலப்பனின் அக்கா பிறப்பதற்கு முன்பாகவே அவளது மகன் பாப்பச்சன் பிறந்து கோலப்பனை தாய்மாமனாக்கினான் என்பதை இந்த வரலாறு எப்போதும் சொல்லாது . ஆதாமும் ஏவாளும் அதற்குப் பிற்பாடாகவே பிறந்தனர் .
” கோல் என்பது அதிகாரம் , அப்பன் என்றால் சகலத்தையும் படைத்தவன் ‘ என்பதை ஒரு முறை சொல்லிப் பாருங்கள் . கோலப்பனின் தோற்றத்தில் உள்ள பிழைகள் மறைந்து தெளிவு பிறப்பதைக் காண்பீர்கள் . கோ என்றால் அரசன் , கோமாதா என்றால் பசு , கோயில் என்றால் அரசனின் இல்லம் , கோஷ்டி என்றால் பஜனைக் குழு , கோணையன் என்றால் கோலப்பன் என்பதாய் ‘ கோ ‘ என்று துவங்கும் வார்த்தைகளுடைய பட்டியலின் நீளமானது வெகு சுவாரஸ்யமானவை .
எல்லா மனிதனுக்குள்ளும் ஒரு கோலப்பன் இருப்பான் . எல்லா கோலப்பன்களோடும் ஒரு பாப்பச்சன் இருப்பான் . கடவுளும் , சாத்தானும் என்ற கோட்பாட்டுக் கோப்பிராயங்களும் இதனுள்தான் அடங்கும் . எல்லா மதநூல்களும் நன்மை தீமையென இதைத்தான் எடுத்துரைக்கின்றன . இங்கே கோலப்பனும் , பாப்பச்சனும் கடவுளாகவும் , சாத்தானாகவும் மாறி மாறி உருவெடுப்பதுதான் மனிதர்கள் பன்னெடுங்காலமாய் ஏறெடுக்கும் கோமாளித்தனங்களின் நீட்சி . இதற்கு நாகரீகம் என்றொரு தெண்டித்தனமான பெயர் வேறு வைக்கப்பட்டிருக்கிறது .
எது எங்கனமோ உங்களால் கடவுளையோ , சாத்தானையோ , கோலப்பனையோ , பாப்பச்சனையோ கண்களால் காணமுடியாது . மாறாக உணரமுடியும் . அதையும் மீறி காண வேண்டுமென்றால் புகைப்படத்தில் இருக்கும் சர்வலோகாதிபரைக் காணுங்கள் ! மோட்சம் கிட்டும் .