பீலர்களின் பாரதம் ” என்னும் இந்நூல் பீலர் பழங்குடிகளின் வாய்மொழி இலக்கியமாகும் . பீலர்கள் வட இந்தியாவில் குஜராத் மற்றும் இராஜஸ்தானில் வசிக்கும் பழங்குடியினர் . இந்நூல் வழக்கமான மகாபாரதக் கதையைப் போன்று இல்லாமல் பீலர் பழங்குடிகளின் சமூக , மத மற்றும் வாழ்க்கைச் சூழலைப் பிரதிபலிக்கும் கண்ணாடி போல் அமைந்துள்ளது . கதைமாந்தர்கள் மூலம் பீலர்கள் சமூகத்தில் நிலவும் பழக்கவழக்கங்கள் , சடங்குகள் மற்றும் சமூக அமைப்பு போன்றவற்றை உணர்ந்துகொள்ள முடிகிறது . எழுத்து வடிவம் இல்லாமல் பேச்சு வழக்கில் மட்டுமே உள்ள பூர்வகுடிகள் இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் உள்ளனர் . அவர்களுடைய பேச்சு வழக்கில் தொன்று தொட்டுப் புழக்கத்தில் உள்ள இலக்கியங்கள் வாய்மொழி இலக்கியங்களாகவே உள்ளன . அவ்வாய் மொழி இலக்கியங்கள் பாடல்கள் , கதைகள் , காவியங்கள் , மகா காவியங்கள் ஆகியவற்றைத் தன்னகத்தே கொண்டுள்ளன . இந்தியப் பண்பாடு மற்றும் கலாச்சாரக் கூறுகளை உணர்வதற்கு , வாய்மொழி இலக்கியங்களையும் அறிந்துகொள்வது அவசியமாகிறது . இதனைக் கருத்தில் கொண்டு சாகித்திய அகாதெமி , இந்தியாவில் உள்ள பழங்குடியினர்களின் வாய்மொழி இலக்கியங்களைத் தொகுத்தும் , மொழிபெயர்த்தும் அனைத்து மொழிகளிலும் வெளியிட்டு வருகிறது .