1311 ல் டெல்லி சுல்தான் அலாவுதீன் கில்ஜியின் தளபதி மாலிக் காபூரின் படையெடுப்பின்போது மதுரையில் இருந்து மீனாட்சியம்மனையும் சுந்தரேசரையும் அன்றைய வேணாட்டுக்கு கொண்டுவந்து ஆரல்வாய்மொழி அருகே உள்ள பரகோடி கண்டன் சாஸ்தா ஆலயத்தில் மறைத்து வைத்தனர் என்பது வரலாறு . 1368 வரை மீனாட்சியம்மன் ஆரல்வாய்மொழியில் இருந்தாள் . அங்கிருந்து மீண்டும் மதுரைக்குக் கொண்டு செல்லப்பட்டாள் . அந்த வரலாற்றுப் பின்னணியில் எழுதப்பட்டது இந்நாவல் . ” இது ஒரு மங்கலப்படைப்பு , முற்றிலும் மங்கலம் மட்டுமே கொண்ட ஒன்று ” என்று ஆசிரியர் குறிப்பிடுகிறார் .
கதை என்ற வடிவின்மீது எனக்குத் தீராத மோகம் உண்டு , தொடக்கம் , முடிச்சு , முதிர்வு என்ற அமைப்பு உள்ள கதையின் செவ்வியல் வடிவம் மனித குலத்தின் சாதனைகளில் ஒன்று என்றே நான் எண்ணுகிறேன் . காண தமிழில் பெரும்பாலான படைப்பாளிகளின் பெருந்தொகைகளில் ஒரேவகை ஆக்கங்களையே முடியும் . இந்தத் தொகுப்பில் ஒரே வகையான சிறுகதைகளைப் பார்க்க இயலாது . துல்லியமான யதார்த்தச் சித்திரிப்பு , முழுமையான மிகை புனைவு , புராணப்புனைவு , சமூகச் சித்திரிப்பு , கட்டுரையின் தன்மை கொண்ட கதைகள் , வெறும் படிமங்களால் ஆன கதைகள் என்று பலவிதமான கதைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன . வடிவத்தை , மொழிநடையை , கருப்பொருளை மாற்றியபடி , தாவியபடி இந்தக் கதைகள் இருப்பதைக் காண்கிறேன் .
இவை பெரும்பாலும் திபெத்தில் நிகழும் கதைகள் . திபெத் ஒரு தங்கப்புத்தகம் . வாசிக்க வாசிக்க விரிவது , வாசிப்பவர் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பொருள் அளிப்பது . மானுடத்திலிருந்து தனித்து ஒதுங்கி நின்றிருந்த ஒரு பண்பாடு அது . நித்ய சைதன்ய யதி ஒருமுறை சொன்னதுபோல ‘ கெட்டுப்போகாமலிருக்க குளிர்சாதனப்பெட்டிக்குள் வைத்து பாதுகாக்கப்பட்ட பண்பாடு . மானுடம் இழந்தவை பல அங்கே சேமிக்கப்பட்டிருந்தன . ஆகவேதான் திபெத் அத்தனை மர்மமான கவர்ச்சி கொண்டதாக இருக்கிறது . மீளமீள மறுகண்டுபிடிப்பு செய்யப்படுகிறது . இந்தக்கதைகள் திபெத்தை ஒரு கதைக்களமாகக் கொண்டவை என்பதைக் காட்டிலும் ஒருவகை குறியீட்டு வெளியாகக் கொண்டவை என்று சொல்வதே பொருத்தமானது . கனவில் எல்லாமே குறியீடுகள் . ஒரு கனவுநிலமாகவே இதில் திபெத் வருகிறது . இது மெய்யான திபெத் அல்ல . இது நிக்கோலஸ் ரோரிச் தன் ஓவியங்களில் சித்தரித்த திபெத் . ஆழ்படிமங்கள் வேர்க்கிழங்காக உறங்கும் நிலம் . அத்தனை பொருட்களும் குறியீடுகளாக முளைத்தெழும் மண் . இந்தக்கதைகளில் ஒரு கதையிலிருந்து இன்னொரு கதைக்கு நீண்டுசென்று வலுப்பெறும் ஒரு மெய்த்தேடல் உள்ளது . ஆகவே ஒவ்வொரு கதையும் இன்னொன்றால் நிரப்பப்படுகிறது .
இத்தொகுப்பின் கதைகளில் உள்ள பொதுக்கூறு என பெண்மையின் ஜாலங்களைச் சொல்லலாம் . வாழ்க்கையுடன் விளையாடிக்கொண்டிருக்கும் லீலையின் நாயகி , வாழ்க்கையை தன் கையில் எடுத்து ஆடும் தேவி . இந்த முகங்களை எழுதும்போது ஆசிரியனாக நான் அகத்தே புன்னகை கொண்டிருக்கிறேன் . அப்புன்னகை இக்கதைகளிலும் உள்ளது . இன்று பெண்மையின் இந்த ஜாலங்களை தந்தையின் இடத்தில் இருந்துகொண்டு ஆடுக மகளே என்று சொல்லுபவனாக ஆகியிருக்கிறேன் . இக்கதைகளின் நுட்பங்கள் என நான் நினைப்பது பெண் அளிக்கும் பாவனைகளை , அவை மெய்யாக வெளிப்படுபவையும்கூட . மண்ணின் பாவனைகளே பருவங்களும் பொழுதுகளும் என்பதுபோல . அவையே நம் வாழ்வின் அத்தனை அழகுகளையும் தீர்மானிக்கின்றன .
இலக்கியம் விந்தையானதொரு கலை . முதன்மையாக கலையென நிலைகொள்கிறது . எது கற்பனையை தன் ஊடகமாக கொண்டுள்ளதோ அது கலை . ஆனால் இலக்கியமென்னும் அறிவின் அனைத்துக் கிளைகளையும் தொட்டு விரிவதும்கூட . ஆகவே அது ஓர் அறிவுத்துறையாகவும் நிலைகொள்கிறது . ஆகவே அது பிற கலைகள் எவற்றுக்கும் இல்லாத விரிவை அடையமுடிகிறது . பிற கலைகளைப்போல் அன்றி நேரடியாகவே சமூக உருவாக்கத்தில் , அரசியலில் பங்கெடுக்க முடிகிறது . கலை அந்த ஊடாட்டத்தின் சில புள்ளிகளை இக்கட்டுரைகள் தொட்டுப் பேசுகின்றன . பெரும்பாலும் சிந்தனைக்குரிய சில திறப்புகளை உருவாக்குவதை , சில வினாக்களை முன்வைப்பதை மட்டுமே செய்கின்றன . இலக்கியம் எழுதுவது , வாசிப்பதனால் மட்டுமல்ல தொடர்ச்சியான விவாதத்தாலும் நிலைகொள்ளவேண்டிய ஒன்று . இலக்கியத்தை அதன் வெவ்வேறு களங்களை முன்வைத்து விவாதிக்கும் இக்கட்டுரைகள் இலக்கியத்தை ஓர் அறிவியக்கமாக நிலைநிறுத்தவும் அதன் கலைப்பரப்பை விரிவாக்கவும் முயல்பவை