அறம் வரிசை சிறுகதைகளின் தொடர்ச்சியாக அதே அலைவரிசையில் எழுதப்பட்ட பதினோரு கதைகளின் தொகுப்பு வெண்கடல் . உண்மை மனிதர்களின் வாழ்வியல் கதைத் தொகுப்பாக வந்தது அறம் . ஆனால் மனித வாழ்வின் உண்மையான தரிசனங்கள் இந்தத் தொகுப்பு முழுவதும் ததும்பி நிற்கின்றன . பெரும் பிரபஞ்ச இயக்கத்தில் சிறு துளியாக இருக்கும் மனித வாழ்வினை அதன் தருணங்களின் வழியேதான் நினைவு கூரவோ அடையாளப் படுத்தவோ முடிகிறது . மானுட வாழ்வினை மகத்தானதாக்கும் அத்தகைய தருணங்களே இந்தக் கதைகள் . இதில் வரும் மனிதர்களின் வழியே நாம் சந்திக்கவிருக்கும் அந்த நிகழ்வுகள் இதற்கு முன்போ அல்லது இனியோ நம் வாழ்வில் நிகழ்ந்த , நிகழ இருப்பவை .
உலகவரலாற்றின் மாபெரும் பஞ்சங்களில் ஒன்றால் இந்தியாவின் கால்வாசிப்பேர் செத்தொழிந்த காலம் . ஏகாதிபத்தியத்தால் அம்மக்கள் அழித்தொழிக்கப்பட்டார்கள் . மறு பக்கம் நம்முடைய நீதியுணர்ச்சியும் அவர்களைக் கைவிட்டதென்பதும் வரலாறே . நாம் அத்தனைபேரும் ஏதோ ஒருவகையில் அந்த அழிவுக்குக் கூட்டுப்பொறுப்பேற்றாக வேண்டும் .
இந்நாவல் ஒருவகையில் அனைவரையும் அந்தக் கூண்டில் நிறுத்துகிறது . எங்கே நம் நீதியுணர்ச்சியை நாம் இழந்தோம் என இன்றாவது மறுபரிசீலனை செய்துகொள்ள வேண்டும் .