கூறியது கூறல் ‘ , ‘ போலச் செய்தல் ‘ இவையிரண்டையுமே மறுதலித்து மேலெழும் சுந்தர ராமசாமியின் படைப்புலகின் ஆகச் சிறந்த கதைகளின் தொகுப்பு இந்நூல் .
யதார்த்தக் கதைகளின் வழியே வாசகனை மனவிரிவுக்கு உட்படுத்தும் அதேவேளையில் மொழியழகோடு கூடிய அபூர்வமான சொல்லாட்சிகள் மூலம் கவித்துவத் தருணங்களைத் தேர்ந்த இசைக் கலைஞனைப்போல ஸ்ருதி பிசகாமல் மீட்டும் சு.ரா , நேற்றின் வழித்தடத்திலிருந்து விலகி புதியக் கருக்களைத் தேடிக் கண்டடைந்து முன்னோக்கிச் சென்ற பயணத்தை துலக்கமாக வெளிப்படுத்தும் தொகுப்பு இது . அவர் வரிகளின் இடையே விட்டுச் செல்லும் மௌன இடைவெளிகளைச் சுயஆற்றலால் இட்டு நிரப்பிக்கொள்ளும் வாசகன் தன் மனச்சுனைகளைப் பெரும் மன எழுச்சியோடு கண்டுகொள்கிறான் .
எழுத்தாளனின் “ உள்ளொளி இருளில் மிருகங்களின் கண்கள் போல் பரவசம் ஊட்டக் கூடியது ” என்று சு.ரா. எழுதினார் . அந்த உள்ளொளியை நம்பி ஏற்றுச் செயல்பட்ட ஒரு படைப்பாளியின் மகத்தான கதையுலகம் இது .
ஜல்லிக்கட்டு ஒரு வீர நாடகம் . அது விளையாட்டும்கூட . புய வலு , தொழில்நுட்பம் , சாமர்த்தியம் எல்லாம் அதுக்கு வேண்டும் . தான் போராடுவது மனிதனுடன் அல்ல , ரோஷமூட்டப்பட்ட ஒரு மிருகத்துடன் என்பதை ஞாபகத்தில் கொண்டு வாடிவாசலில் நிற்க வேண்டும் மாடு அணைபவன் . அந்த இடத்தில் மரணம்தான் மனிதனுக்குக் காத்துக்கொண்டிருக்கும் . காளைக்குத் தன்னோடு மனுஷன் விளையாடுகிறான் என்று தெரியாது . அதற்கு விளையாட்டிலும் அக்கறை இல்லை .
அதை மையமாக வைத்துப் புனையப்பட்ட இந்தக் கதையில் ஜல்லிக்கட்டு பற்றிய வர்ணனை தத்ரூபமாகச் சித்தரிக்கப்பட்டிருக்கிறது . நுட்பமாகவும்கூட . ஒரு குறிப்பிட்ட வட்டாரத்துப் பேச்சு வழக்கிலேயே முழுக்க முழுக்க எழுதப பட்டது . படிக்கும்போது சிலிர்ப்பு ஏற்படுத்தும் கதை .