கதையின் பிற்பகுதியில் தோன்றும் கதாப்பாத்திரங்களும் புனைவுகளும் தன் வாலைத் தானே விழுங்கும் பாம்புகளாக முன் கதையினை விழுங்கி உருமாற்றிவிடுவதாக எண்ணினான் . பிரதியின் கதாப்பாத்திரங்களுடன் எதிர்வாதம் செய்து , தலை கனத்து பாதியிலே மூடிவிடுவதுண்டு . ஒவ்வொரு பிரதிக்குள்ளும் எழுதப்படாத பல லட்சம் கதைகள் வௌவால்களாக தொங்கிக் கொண்டிருக்கின்றன . எக்கதைக்கும் முடிவென்பதே இல்லையென்றும் அவ்வாறு முடிக்கப்படும் கதையானது ஆசிரியனுக்கு அக்கணத்தில் தோன்றும் முடிவுதானென்றும் அல்லது முடிக்க முடியாதவொன்றின் தொடக்கம் தானென்றும் அறிந்து கொண்டான் . இன்னும் வாசித்து முடிக்கப்படாத பல கதைகள் அவ்வறையில் சிதறிக்கிடந்தன .
இத்தொகுப்பில் உள்ள சிறுகதைகள் 2020 இல் எழுதப்பட்டவை . கோவிட் 19 ஊரடங்கில் ம.நவீன் தொடர்ச்சியாக எழுதிய இக்கதைகள் மலேசிய நிலத்தின் அசாதாரண அனுபவங்களைப் புனைவுகளாக்கியுள்ளன . முந்தைய தொகுப்புகளான போயாக் அவரது மண்டைஓடி , ஆகியவற்றிலிருந்து முற்றிலும் மாறுபட்ட பாணியில் அமைந்த இக்கதைகள் தனக்கான புதிய சாத்தியங்களை அந்தந்த புனைவுகள் வழியே வடிவமைத்துக் கொண்டுள்ளன . விலங்குகளும் பறவைகளும் ஓடித்திரியும் இக்கதைகள் முழுவதும் அறிவும் அதற்கு புரியாத வெவ்வேறு சந்தர்ப்பங்களும் முயங்கிக்கிடக்கின்றன . அதுவே வாசகர்களின் அகலாத கவனத்தை மேலும் தீவிரமாக்குகின்றன
விண்ணலிருந்து புவிக்கு வருபவர்கள் புனைவிற்கு புதியவர்களல்ல , ஆனால் காலந்தோறும் அப்புனைவுகளுக்கான தேவை வேறு ஒன்றாக இருக்கிறது . நவீன மொழியில் பல்மதத்தன்மை ( Syctretic ) கொண்ட ஒரு பாத்திரத்தை படைப்பது அரசியல் ரீதியான சவாலாகவும் ஆகிட , அரசியலின் பொருட்டே அதனைக் கையாண்டிருக்கிறார் ஆசிரியர் . அதே நேரம் எர்தா ஒரு சுவாரசியமான நாவலாகவும் வந்துள்ளது .