எளிமையே ஆகப் பெரும் சிரமத்தை தரும் . ஆனால் அந்த சிரமம் உமா மோகனுக்கு இல்லை என்பதை இவரின் சில சிறந்த கவிதைகள் உணர்த்துகின்றன . ஆழமான கவிதைகளாக மாற்றுவதிலும் அக உணர்ச்சிகளை எளிய அவரின் ஆளுமை வெளிப்படுகிறது . சங்கக் கவிதைபோல ஒரு ஒற்றைக் காட்சியைக் சத்தமில்லாமல் காட்டிவிட்டு சென்றுவிடுகிறார் . பிறகு அதன்மூலம் நீங்கள்தான் உங்கள் கவிதையை எழுதிக்கொள்ள வேண்டும் . இதன்மூலம் வாசகனை சஹிர்தய நிலைக்கு உயர்த்துகிறார் .
‘ பொட்டு மூக்குத்திபோலப் பூத்திருக்கும் வயலட் பூவுக்கு ஏற்ற வடிவிலில்லை அதன் இலைகள் இப்படித்தான் நடந்துவிடுகிறது பல நேரம் ‘
பாருங்கள் . அவ்வளவுதான் முடிந்துவிட்டது கவிதை . இது பூவையும் இலையையும் பற்றியதா என்ன . யாரை பற்றியது . எந்த உறவைப் பற்றியது . ஆர்ப்பாட்டம் இல்லை . மதர்த்த சொற்கள் இல லை இருண்மை இல்லை . எந்த படாடோபமும் இல்லை . ஆனால் சொல்லாமல் சொல்லி ஒன்றை உணர்த்திவிடுகிறதே .
1946 ஆகஸ்ட் 16 ம் தேதி கல்கத்தாவில் நடந்த மதக் கலவரம்தான் இந்தியா – பாகிஸ்தான் பிரிவினைக்கே காரணமாக இருந்தது . இந்திய வரலாற்றிலேயே அதிபயங்கரமாக நடந்த அந்த மதக்கலவரத்தில் மூன்றே தினங்களில் 10,000 பேர் கொல்லப்பட்டார்கள் ; ஒரு லட்சம் பேர் தங்கள் வீடுகளை இழந்து அகதிகளானார்கள் . நடந்த படுகொலைகளும் கூட காட்டுமிராண்டித்தனமாக நடந்தன . இப்படுகொலைகளின் சாட்சியாக இதுபோன்ற நூற்றுக் கணக்கான புகைப்படங்கள் இன்று வரலாற்றின் ஏடுகளில் புகை படிந்து கிடக்கின்றன . இதையெல்லாம் ஒரு மீள்பார்வைக்கு உட்படுத்த விரும்பினால் நாம் வாசிக்க வேண்டிய ஒரே எழுத்தாளர் சி.சு. செல்லப்பா தான் . அவர் காலத்திய மற்ற எழுத்தாளர்கள் யாரும் இவ்வளவு நேரடியாக ஏன் , மறைமுகமாகவும் கூட சுதந்தரப் போராட்ட காலகட்டத்தின் அரசியலை எழுதியதில்லை . இதனாலேயே சி.சு. செல்லப்பாவின் சுதந்திர தாகம் மிகுந்த முக்கியத்துவம் பெறுகின்றது . –
வாழ்வின் திரா ஆச்சரியங்களும் , முடிவற்றுத் தொடரும் காமத்தின் தீண்டல்களும் கொண்டவர்களாக தஞ்சை ப்ரகாஷின் கதை மாந்தர்கள் வலம் வருகிறார்கள் . ப்ரகாஷ் , அசட்டுத்தனமான , மிகையுணர்ச்சியற்ற நிதானம் கொண்ட கதைசொல்லி , வீழ்ச்சியுற்ற , தோல்வியடைந்த மனிதர்களை இவரது கதைகளில் நிறைய சந்திக்கலாம் . தன்னைத்தானே கேள்விக்குள்ளாக்கிக் கொள்கிறவர்களாக அவர்களை நாம் தெரிந்து கொள்கிறோம் . நன்றாக வாழ்ந்தவர்கள் , காலத்தால் சிதிலமுற்று தங்களின் கதையை அசைபோடுவது மிகுந்த மனச்சவாலுக்குரிய ஒன்று . துரோகங்கள் , புறக்கணிப்புகள் , ஏமாற்றங்கள் என எல்லாச் சோதனைகளையும் சந்தித்து இடிபாடடைந்து , கைவிடப்பட்ட பழைய வீட்டைப்பார்ப்பதற்கு ஒப்பானது . அதிலிருந்து மனதைச் சுத்திகரித்து மீள்வதற்கு , கடும் பிரயத்தனமும் , அசாத்திய நம்பிக்கையும் தேவை . வாழ்க்கையின் பிரம்மாண்டமான பகாசுரச் சக்கரங்களின் கீழ் நசுங்கி வதைபடும் மனித மனங்களில் உறவுகளுக்கிடையே ஏற்படுகிற சிக்கல்களால் , கீழ் – மேல்நிலைகளுக்கு நாம் தள்ளப்படுகிறோம் . ப்ரகாஷ் தன் கதைகளின் வழியே அறியத் தருகிற மன அமைப்புகளை உள்வாங்கிக் கொண்டால் , எதன் பொருட்டு இச்சிக்கல்கள் நம்மை அலைக்கழிக்கின்றன என்ற ஓர் இழையை உணரமுடிகிறது . முடிவற்று எழுகிற காமம் , ஒளிக்கப்படுகிற , அடக்கப்படுகிற அந்தரங்க உடல் எழுச்சிகள் , அதனால் ஏற்படுகிற குழப்பமும் , சோர்வும் , அலைக்கழிப்புகளும் முடிவற்ற நெடுங்கதையாகக் காலங் காலமாகத் தொடர்வதைப் புரிந்து கொள்ளலாம் .