ஒளசேப்பச்சன் ஜெயமோகன் கதைகளில் தோன்றி புகழ்பெற்ற துப்பறியும் கதாபாத்திரம் . அவர் தோன்றும் கதைகள் இவை . வழக்கமான துப்பறியும் கதைகளைப்போல ஒரு குற்றத்தைத் தொடர்ந்து சென்று குற்றவாளியைக் கண்டடைபவை அல்ல . இவை குற்றம் என்னும் புள்ளியில் தொடங்கி வரலாறு , பண்பாடு ஆகியவற்றை இழுத்துக்கொண்டு முன்னகர்ந்து வாழ்க்கையின் அறியப்படாத ஒரு இடத்தைச் சென்று தொடுகின்றன . மானுடனை துப்பறியும் கதைகள் என்று இவற்றைச் சொல்லமுடியும் .
வெண்முரசு எழுதிக்கொண்டிருக்கும் இத்தருணத்திலும் சிறுகதைகள் எழுதுவது எனக்குத்தேவையாக இருக்கிறது . இது அந்த பெருமொழிபின் வெளியில் இருந்து அகன்று எனக்கான சிறிய உலகை , நான் வாழும் அன்றாடத்தின் சிறுதருணங்களை உருவாக்கிக்கொள்வதற்காக . இங்கே நான் என் சிறுதூண்டிலில் சிக்கும் சிறிய மீன்களை எடுத்துக் கொள்கிறேன் . இவற்றை எழுதிய எல்லா கணங்களும் அரியவை , ஆழத்தில் நலுங்கிய நிறைவின்மை ஒன்றை நிகர் செய்துகொண்டவை .
அதேசமயம் இவையனைத்துமே வெண்முரசுக்கான எதிர் வினைகளும்கூட . அயினிப்புளிக்கறி போல எந்த விதமான பெருமைகளும் தனித்தன்மைகளும் இல்லாத சாதாரண மனிதர்களின் சாதாரணத் தருணங்களின் இனிமையை எழுதும்போது நான் மகாபாரதத்தின் மாமனிதர்களின் பெருந்தருணங்களின் ஓங்கிய துயரையும் இனிமையையும் நிகர்செய்கிறேன் . ஆகவே இவை எனக்கு அணுக்கமானவை . வாசகர்களுக்கும் அவ்வாறே இருக்கும் என நினைக்கிறேன் . –
அனுபவங்களை காலவரிசைப்படி சொல்லமுடியாது . சொன்னால் அதில் இருப்பது புறவயமான காலம் . கடிகாரக் காலம் . அது அர்த்தமற்றது . அகவயமான காலத்தில் அனுபவங்கள் எப்படி சுருட்டி வைக்கப் பட்டிருக்கின்றன என்பதே முக்கியமானது .
அதை வெளியே எடுக்க ஒரே வழி மிகவலுவான மையச் சரடு ஒன்றைத் தொட்டு இழுப்பதே . அது இழுத்துவரும் அனுபவங்களே அகக் காலத்தின் வரிசையை அமைத்து விடுகின்றன . நான் ஏதாவது ஒரு நினைவை கைபோன போக்கில் எழுத ஆரம்பிப்பேன் . அந்த அனுபவத்தின் சாரமாக ஓடும் சரடு என ஒன்று தென்படும் . அது எந்தெந்த விஷயங்களைக் கொண்டு வருகிறதோ அதை எழுதிச் செல்வேன் . அதன் வழியாக அப்போது அதாவது எழுதும் கணத்தில் ஒரு மெய்மையை அடைந்ததும் முடிப்பேன் .
இக்கதைகள் குறுகிய காலகட்டத்தில் தொடர் உளஎழுச்சிகளால் உருவாக்கப்பட்டவை . அத்தகைய காலகட்டம் அரிதாக நமக்கு வாய்த்து மறைந்துவிடுகிறது . முகில்வண்ணமென கொஞ்சநேரம் எஞ்சியிருக்கிறது . எண்ணுகையில் இனிதாகிறது . இக்கதைகளும் அப்படி எண்ணத்தில் இனிக்கின்றன . உறவு , பிரிவு , கண்டடைதல் , கண்நெகிழ்தல் என இங்கு நிகழும் வாழ்க்கையின் வண்ணங்கள் இக்கதைகளில் பதிவாகியிருக்கின்றன . எத்தனை எத்தனை மனிதர்கள் என்ற எண்ணமே இப்போது இவற்றை வாசிக்கையில் தோன்றுகிறது . வாழ்க்கையின் வண்ணங்கள் அழகியவை .
இவை கவிதையின் விளிம்பில் நின்றிருக்கும் கதைகள் , கவிதைக்குரிய முடிக்காத சொல்லி தன்மை , உருவாகாத உணர்வுகளாக நின்றிருக்கும் நன்மை , சொல்லாட்சிகள் வழியாக மட்டுமே தொடர்புறுத்தும் தன்மை ஆகியவை கொண்டவை இக்கதைகள் . அவ்வகையில் தமிழில் புதுமைப்பித்தனில் இருந்து தொடங்கும் ஒரு நுண்ணிய மரபில் இணைப்வைய ஆகவே உணர்வெழுச்சிகளை , வாழ்க்கையின் முழுச்சித்திரங்களை இக்கதைகள் காட்டுவதில்லை . புள்ளகைக்க வைக்கும் , கற்பனை விரியச்செய்யும் , வாழ்க்கையின் முழுமை நோக்கிய பார்வை ஒன்றை அளிக்கும் ஒரு தருணம் . அல்லது உளநிலை மட்டுமே இவற்றில் வெளிப்படுகிறது .
புறவயமான உலகின் பொதுவான தளத்திலேயே இவை நிகழ்கின்றன . மிக மெலிதாக அந்த உலகின் தர்க்கங்களை மீறி கனவுக்குள் , அதீதத்திற்குள் சென்று தொட்டு மீள்கின்றன . எங்கு அந்த மீறல் நிகழ்கிறதோ கண்டடைதல் அங்குதான் இக்கதைகளின் மையக் அல்லது அடிப்படைக்கேள்வி உள்ளது . இவை தங்கள் முடிவிலியை அங்கேதான் சென்றடைகின்றன . அங்கிருந்து அவை கொண்டுவருவது இவ்வுலக வாழ்க்கையை புதிய ஒளியில் காட்டும் ஒரு கோணத்தை . இவ்வாழ்க்கையை பிளந்துசெல்லும் ஒரு புதிய ஒரு அர்த்தப்பரப்பை . மெய்மை எப்போதுமே அப்பால்தான் உள்ளது .. மலையுச்சி மேல் நின்றாலொழிய நகரத்தைப் பார்க்க முடியாது . இவை அத்தகைய உச்சிமுனைப் பார்வைகள் .
இந்நூல் இலக்கிய வாசிப்புக்குள் நுழையும் எதிர்கொள்ளும் அடிப்படையான கேள்விகளுக்கு இலக்கியம் என்றால் என்ன . இலக்கியவாசிப்புக்கு பயிற்சி தேவையா . இலக்கிய வாசகன் எதிர்கொள்ளும் தடைகள் என்ன , இலக்கியக் கருத்துக்களைச் சொல்வது எப்படி என்பதுபோன்ற பல வினாக்களுக்கு விளக்கம் அளிக்கும் கட்டுரைகள் இவை . உலக இலக்கியக் களத்தில் சென்ற இருநூறாண்டுகளில் நிறைய விவாதிக்கப்பட்ட அடிப்படைகள் இவை . ஆனால் தமிழ்ச்சூழலில் இவற்றை பேசுபவர்கள் குறைவு . இவற்றை அறியாததனாலேயே பலர் ஆரம்பகட்ட குழப்பங்களையே தங்கள் சிந்தனைகளாக கொண்டிருக்கிறார்கள் . அவர்களை அந்தச் சிக்கல்களில் இருந்து விடுவித்து உண்மையான கலைத்தேடல்களுக்குச் செலுத்த இந்த விவாதங்களால் இயலும் .
ஆசிரியர் இருபத்தைந்து ஆண்டுக்காலம் பணியாற்றிய தொலைத்தொடர்புச்சூழல் இக்கதைகளில் உள்ளது . ஆனால் அந்த அலுவலகச் சூழல் , தொழில்நுட்பச்சூழல் ஓர் அறியப்படாத வாழ்க்கைக் களம் மட்டுமாக காட்டப்படவில்லை . தொலைதொடர்பு என்ற செயல்பாடு குறியீடாகவே எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது . அதன் வழியாக விரியும் கதைகள் வாழ்க்கையின் , பிரபஞ்சத்தின் அறியாத நெறிகளை சொல்லிவிட முயல்கின்றன . தொழில்நுட்பம் கவித்துவக் குறியீடாக ஆவதனூடாகவே இவை இலக்கியமாகின்றன .