சரித்திரப் புதின வாசகர்கள் பலரை உருவாக்கிய பெருமை யுடைத்த பொன்னியின் செல்வன் நம்மையும் தன்பால் ஈர்த்துக் கொண்டமையால் , சக வாசகனான நாம் , சரித்திரப் புதின வாசகப் பெருமக்களை இப்புதினம் மூலமாய் சந்திக்கும் அரும் வாய்ப்பையும் பெற்றோம் .
பெருமகனார் கல்கி அவர்களின் விவரிப்பில் விளங்கிற்று , தனக்குரிய அரியணையை சிறிய தந்தைக்கு அளித்த தியாக சிகரம் அருமொழிவர்மனான ராஜராஜரின் உன்னதம் .
ஆயிரக்கணக்கான மரணங்களை நிகழ்த்தியேனும் கைப்பற்றத் துடிக்கும் , சகல போகங்களும் கிட்டும் ராஜ பதவியை ஒருவர் விட்டுத்தருவது சாத்தியமா ? எனும் வினவலும் உடன் எழத்தான் செய்தது . சோழர்கள் திரு . K.V. ராமன் என்பாரால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட K.A. நீலகண்ட சாஸ்திரியாரின் THE COLAS எனும் நூல் , சரித்திரச்சான்றுகளோடு அறத்திலும் மறத்திலும் ராஜ்ய பரிபாலனத்திலும் மிகச்சிறந்தவர் என்று விவரித்து RAJARAJA THE GREAT என்றுரைத்து உறுதியும் செய்யலாயிற்று .
இந்திய வரலாற்று ஏடுகளில் பொன்னால் பொறிக்கப்பட்ட மன்னர்கள் பலருள் ஒருவரான ராஜராஜருக்கு மகனாகப் பிறந்தால் ?
இவன் தந்தை எந்நோற்றான் எனும் மொழிக்கு உதாரணமாகத் திகழ வேண்டிய கட்டாயம் இருந்தது , ராஜராஜரின் புதல்வரான ராஜேந்திரசோழருக்கு ( 1012-44 ) என்றே வரலாற்றுப் பேராசிரியர்கள் பலரும் கருதுகின்றனர் .
அதற்கு ஆதாரமாக , ” உடையார் ஸ்ரீராஜேந்திர சோழ தேவர் உத்தராபதத்தில் பூபதியரை ஜயித்தருளி யுத்தோத்சவ விபவத்தால் கங்காப் பரிக்கிரகம் பண்ணியருளின கங்கை கொண்ட சோழ னென்னுந் திருநாமத்தால் இத்திருமுற்றத்தில் வைத் தருளின உத்தமாக்ரகம் கங்கை கொண்ட சோழனின் ” ( திரு.சதாசிவ பண்டாரத்தாரின் பிற்காலச் சோழர் சரித்திரம் எனும் நூலின் பக்கம் 126 லிருந்து ) விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள எண்ணாயிரம் எனும் ஊரில் கிடைக்கப்பெற்ற சாசனமானது , அவர் காலத்திற்கு முன்னர் தமிழகத்தின் மன்னர்கள் எவரும் செய்திராத உத்தராபதத்திற்குப் படையெடுத்துச் சென்று மன்னர்களை வென்று கங்கை கொண்டான் என்றும் , பாரதவர்ஷத்திற்கு அப்பால் இருந்த சுவர்ணபூமியின் அரசுகள் பலவற்றையும் வென்று கடாரம் கொண்டான் என்றும் , பூர்வதேசமும் கங்கையும் கடாரமும் கொண்டான் என்றும் விருதுப்பெயர்கள் தாங்கியமை குறித்து விவரிக்கும் சாசனங்கள் திகழ்கின்றன .
சரித்திரத்தின் பல பகுதிகள் இன்னும் தெளிவடையவில்லை என்றே அறிஞர்கள் பலரும் உரைக்கின்றனர் . சில பகுதிகள் மட்டுமே சாசனங்கள் மூலமாகவும் பாக்களாகவும் வம்சாவளிச் சரிதைகளாகவும் கிட்டியிருக்கின்றன . அவ்வண்ணம் கிட்டியவை குறித்தும் வரலாற்று ஆய்வாளர்களிடையே வேறுபட்ட கருத்துகளும் நிலவுகின்றன .
அந்த வேறுபட்ட கருத்துகள் அடங்கிய பகுதிகளில் ராஜேந்திர சோழரின் காலமும் அடங்கும் . ராஜேந்திரரின் ஆட்சிக்காலத்திற் குட்பட்ட கி.பி.1021-26 , நாம் இப்புதினத்திற்கென எடுத்துக்கொண்ட காலகட்டமும் அதற்கு விதிவிலக்கல்ல என்பதையும் அறிஞர்களின் குறிப்புகளிலிருந்து அறிய நேர்கிறது .
நாம் இப்புதினத்தை ஆக்க விழைந்தபோது , பெரும்பாலான ஆய்வாளர்களின் குறிப்புகளை ஒட்டியே துவங்கினோம் . பின்னாட் களில் அவர்களது குறிப்புகளிலிருந்தும் கணிப்புகளி லிருந்தும் விலகவும் , பாரதவர்ஷத்தின் பழம் புவியமைவைக் குறித்தும் நாம் தேடவேண்டிய நிர்ப்பந்தமும் ராஜேந்திரரின் மெய்க்கீர்த்தி வரிகளால் நேர்ந்தது . அம்மெய்க்கீர்த்தியில் குறிப்பிடப்பட்டுள்ள நாடுகள் சிலவற்றைக் குறித்து ஆய்வாளர்களிடையே ஒருமித்த கருத்து இல்லாமையே அதற்கு காரணமாயிற்று .
தொழில்நுட்பப் பயிற்சி பெற்றிருந்தமையால் கிட்டிய ஆயும் திறன் கொண்டு நாம் அலசிய புவியமைவைக் குறித்த நூல்களிருந்து நாம் பெற்ற சில குறிப்புகளையும் , பாரத வர்ஷத்தின் சரித்திரத்தில் முக்யத்துவம் பெற்றுள்ள கி.பி.1025-26ல் நடந்த ஓர் போரையும் கவனத்தில் கொண்டு நாம் தீட்டியதே இப்புதினமாகும் .
அவரவர்க்குரித்தான பணியைச் செய்வதே பெரும்பாடாயிருக்க , இவ்வெழுத்துப்பணியை நாம் புரிவதற்கும் , நமது புதினத்தின் வளர்ச்சிக்கு பெரும் துணையாயும் , தேவையான ஆலோசனைகள் தந்தும் , பதிப்பிப்பதற்கு ஏதுவாக பல அம்சங்களைச் சேர்த்தும் உதவிய சரித்திரப் புதினச் சேகரிப்பாளரான திரு . சுந்தர் கிருஷ்ணன் அவர்கட்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் .
பொன்னியின்செல்வன் மற்றும் அகத்தியர் என இரு யாஹூ மடற்குழுமத்தாரின் பதிவுகள் நமக்குப் பேருதவியாயிருந்தன . அம்மடற்குழுக்களை அலங்கரிக்கும் அங்கத்தினர்க்கும் ,
நாம் இப்புதினத்தை இயற்றவிருப்பதாகச் சொன்ன போது , ஊக்கம் தந்தும் , ராஜேந்திரரின் சரித்திரத்தில் உள்ள ஐயப்பாடு களையும் விவரித்துதவிய சிற்பக்கலை ஆராய்ச்சியாளரான Poetryinstone விஜய்குமார் அவர்களுக்கும் , ராஜேந்திரர் குறித்து பற்பல குறிப்புகளை அளித்துதவிய சரித்திரப் புதின எழுத்தாளர் திரு . விஷ்வக்சேனன் அவர்களுக்கும் , நமக்குப் பலவகையிலும் உதவி புரிந்த , நம்முடன் பணிபுரியும் திரு.காளிதாஸ் அவர்களுக்கும் , நமது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம் .
உத்தராபதம் எனப்பட்ட பாரதவர்ஷத்தின் வடபகுதியில் , கி.பி. 998 முதல் 1030 வரை கோலோச்சி , தனது ஆட்சிக்காலத்தில் நாற்றிசையிலும் தனது வெற்றிக்கொடியைப் பறக்கவிட்டு , தனது வஜ்ர சரீரத்தில் எழுபத்து இரண்டு விழுப்புண்கள் தாங்கிய மன்னவருடனும் ,
பூர்வதேசம் என்றழைக்கப்பட்ட பாரதவர்ஷத்தின் கிழக்குப் பகுதியில் இருந்த பால சாம்ராஜ்யத்தை இரண்டாம் முறை நிறுவியவர் என்று வரலாற்றாசிரியர்களால் புகழப்பட்டவருடனும் ,
சுவர்ணபூமியில் பெரும் வலிமை கொண்டு , வணிக சாம்ராஜ்ய மாகத் திகழ்ந்த ஸ்ரீவிஜயத்துடனும் பொருதிய , ராஜேந்திரசோழர் குறித்து இயல்பான நடையில் இயற்றப்பட்டுள்ள , நமது முதல் முயற்சியான இப்புதினத்தில் வாசக அன்பர்கள் , குறையேதும் காணின் மனம் பொறுத்து அருளுமாறும் ,
உலகெங்கும் தமிழர்களின் வீரத்தைப் பறைசாற்றிய ராஜேந்திரரின் மெய்க்கீர்த்தியில் கூறப்பட்டுள்ள நாடுகளின் அமைவிற்கேற்ப , நீண்டதொரு பயணத்திற்குத் தயாராகும் வாசக அன்பர்கள் தங்களது கற்பனைப் புரவியில் ஆரோகணித்து , கி.பி .1021 ம் ஆண்டின் கோடைகாலத்தை அடையுமாறும் கேட்டுக்கொள்கிறோம் .