காலனித்துவக் கால ஐரோப்பியரது ஆவணங்கள் கடந்த 600 ஆண்டு காலத் தமிழ்நாட்டு வரலாற்றை அறிந்துகொள்ள உதவும் முதன்மை ஆவணங்களாகத் திகழ்கின்றன . அரசியல் , வணிகம் , வாழ்வியல் , சமயம் , சமூகம் என பலதரப்பட்ட தகவல்களை இவை வெளிப்படுத்துகின்றன . இந்த நூல் 18 ஆம் நூற்றாண்டில் மெட்ராஸ் நகர அமைப்பு , சமூக அமைப்பு , ஐரோப்பியரும் உள்நாட்டு மக்களும் இணைந்து வாழ்ந்த சூழல் போன்றவற்றை நேரடி ஆவணக் குறிப்புகளால் பதிவாக்கிப் படம்பிடித்துக் காட்டுகின்றது . மெட்ராஸ் நகரில் இன்றைக்கு 250 ஆண்டுகளுக்கு முன்னர் பயன்படுத்தப்பட்ட காசு வகைகள் , தண்ணீரைக் காசு கொடுத்து வாங்கிய செய்திகள் , கடைவீதிகள் , ஒவ்வொரு வீட்டிலும் நிறைந்திருந்த ஏராளமான தாவர வகைகள் , ஐரோப்பியர் உணவுத் தயாரிப்பு , பல நாடுகளிலிருந்து மெட்ராஸுக்கு வந்த கப்பல்களில் இறக்குமதி செய்யப்பட்ட பொருட்கள் , உள்ளூர் மக்களைப்பற்றி ஐரோப்பியர் கொண்டிருந்த கருத்துக்கள் பற்றியும் பேசுகிறது .
பெஞ்சமின் சூல்ட்சேவின் குறிப்புகளை ஜெர்மன் மூல வடிவிலிருந்து சுபாஷிணி மொழிபெயர்த்து வழங்கியிருக்கின்றார் . கூடுதலாக நூலில் வழங்கப்பட்டுள்ள இரண்டு வரைபடங்களும் சென்னையின் படிப்படியான வளர்ச்சியைக் காட்டுகின்றன . இன்றைய சென்னையின் ஆரம்பகால நகர உருவாக்கத்தையும் சூழலையும் அறிந்துகொள்ள இந்நூல் முதன்மைத் தரவுகளை முன்வைக்கின்றது .