மேஜர் முருகன் இந்திய இராணுவத்தில் பணியாற்றியவர் என்பதால் தனது குடும்பத்தினருடன் பல மாநில மக்களுடன் , பல மொழிகளைப் பேசி , பழகிய அனுபவம் பெற்றவர் . பணி என்னவோ பயிற்சி , பாதுகாப்பு , துப்பாக்கி என்று கழிந்தாலும் , எங்கு சென்றாலும் அந்தந்தப் பகுதிகளில் வாழும் மக்களைத்தான் அதிகமும் கண்காணித்திருக்கிறார் . அவர்களது வாழ்க்கைச் சம்பவங்களையும் குணாதிசயங்களையும் அக்கறையோடு சேகரித்து எழுத்தாக்க முயன்றிருக்கிறார் .
இராணுவத்திலிருந்து ஓய்வுபெற்ற பிறகு , சிறுவயதில் பழகிய மனிதர்கள் , கேட்ட குரல்கள் , பார்த்த சம்பவங்கள் எல்லாம் நினைவில் வந்து , எதையோ இழந்துவிட்ட உணர்வை ஏற்படுத்த , அவற்றையெல்லாம் எழுதாமல் விட்டுவிட்டோமே என்கிற மனஉறுத்தல் தலைதூக்கியிருக்கின்றது . பிறகு , தான் பார்த்தவற்றையும் உணர்ந்தவற்றையும் தனது வாசிப்பு அனுபவத்தைக் கொண்டு , இக்கதைகளைப் படைத்திருக்கிறார் .
‘ மந்திரம்மாள் ‘ மேஜர் முருகன் எழுதிய முதல் சிறுகதைத் தொகுப்பு . ஒரு ஆரம்ப சிறுகதைகள் எழுத்தாளருக்கே உரிய தன்மையில் இந்தச் அமைந்திருந்தாலும் , ஒவ்வொரு கதையும் தேர்ந்த எழுத்தாளரைக்கூட மிஞ்சிவிடும் அளவுக்கு கற்பனை வளத்துடன் உள்ளது என்பதை இந்நூலை வாசிக்கும் வாசகர்களும் உணர்வார்கள் .