பாடலின் கவிதை வரிகளை சிலாகித்து எழுதுபவர்கள் மீது , நாம் ரசித்தது போலவே ரசித்திருக்கிறாரே என்ற புள்ளியில் அவர்பால் மிகுந்த நட்பு பிறந்து விடுகிறது . அவருக்கும் நமக்கும் பெரிய தொடர்பு ஏதும் இருக்கப் போவதில்லை . பொதுவான அம்சமாக ரசனை மட்டுமே உண்டு . அது போதாதா நட்பு பூக்க … ? தம்பி இளம்பரிதி அத்தகையவர் . மொழிவளம் மிக்கவர் . பாடலின் வரிகளை சிலாகித்து எழுதுவதில் பெரும் ரசனைக்காரர் . அவரது இந்த ‘ மடை திறந்து ‘ தொகுப்பை ரசனைகளின் வாசல் என்றே சொல்லலாம் . இந்தத் தொகுப்பு உங்கள் கைகளில் மிதக்கிறது என்றால் சர்வ நிச்சயமாக நீங்கள் ரசனை மேவியவராகவே இருத்தல் வேண்டும் . ஏனெனில் ஒருபோலான மனங்களை ஒன்றிணைப்பதுதான் கலையின் வினை .