கருத்தமுத்துவின் முதற் காமம் ஜெஸ்ஸியில் நிகழ்கிறது . ஆனால் அது கிறித்தவ மதத்தை அறிதலும்கூட . உடலை , காமத்தை ஒறுக்கும் ஒரு மதத்தைக் காமத்தினூடாக அறிதல் . அந்த அனுபவத்தின் பின்னணியாக அமைகிறது பழைய ஏற்பாட்டுப் பைபிளின் வரி : ” சீயோன் குமாரத்தியே , கெம்பீரித்துப்பாடு . இஸ்ரவேலரே ஆர்ப்பரியுங்கள் . எருசலேம் குமாரத்தியே நீ முழு இருதயத்தோடும் மகிழ்ந்து களிகூரு . உன் ஆக்கினைகளை அகற்று . திறந்த உடலைக் களிப்பாக்கு .
இத்தகைய கதைக்கருக்களை எழுதத் தொடங்கியதுமே தமிழ் எழுத்தாளனுக்குக் கைநடுக்கம் தொடங்கிவிடும் . பலநூறு முற்போக்கு இடக்கரடக்கல்களால் ஆனது நம் புனைவிலக்கியச் சூழல் , பல்வேறு சாதிய அடியோட்டங்களால் அலைக்கழிக்கப்படுவது . இவை இரண்டுக்கும் நடுவே ஒருவகையான ‘ சமநிலையை பேணிக் கொள்ளவே நம் படைப்பாளிகள் எப்போதும் முயல்கிறார்கள் . சோ . தர்மன் , ஒரு கிராமத்துக்காரருக்கே உரிய ‘ வெள்ளந்தித்தனத்துடன் நேரடியாகப் பிரச்சினைகளின் மையம் நோக்கிச் செல்கிறார் . ஆய்வாளனுக்குரிய தகவல் நேர்த்தியுடன் கலைஞனுக்குரிய நுண்ணிய நோக்குடன் ஓட்டுமொத்தமான சித்திரத்தை உருவாக்குகிறார் .
கருத்தமுத்து ஒரு ஆணாக , குடிமகனாக ஆவதன் நிதானமான மலர்தலை இதன் கதையோட்டம் காட்டுகிறது . நாவல் தொடங்கும் போது மூன்று வகையான அகப்புறச் சூழல்களை அவன் எதிர் கொள்கிறான் . ஒன்று கல்வி , இன்னொன்று மதம் , இணையாகவே காமம் , ஒவ்வொன்றையும் அவன் தன்னளவில் புரிந்துகொள்கிறான் . இந்த மூன்றும் ஒன்றுடன் ஒன்று பின்னி உருவாகியிருக்கும் ஒரு பெரும் பரப்பைச் சென்றடைகிறான் .
ஒரு தேர்ந்த புனைவாளன் மட்டுமே உருவாக்கும் நுண்ணிய விளையாட்டுக்களால் ஆன புனைவுப் பரப்பு இது .