அறிவொளிக் காலத்தில் தோன்றிய செவ்வியல் அரசியல் பொருளாதாரக் கொள்கை ஆடம் ஸ்மித் கைகளில் பொருளியல் என்ற தனி இயலாக உருப்பெற்றது . அவருடைய வழிவந்த கார்ல் மார்க்ஸ் பொருள் மதிப்பை உருவாக்குவது தொழிலாளரின் உழைப்பே என்றார் . நவசெவ்வியல் பொருளாதாரக் கருத்துகளை முன்வைத்த அறிஞர்களோ நுகர்வோரின் விருப்பத் தேர்வுகளே பொருள் மதிப்பின் அடிப்படை என்று வாதிடுகின்றனர் . ‘ ஆடம் ஸ்மித் முதல் கார்ல் மார்க்ஸ் வரை ‘ என்ற நூலில் செவ்வியல் அரசியல் பொருளாதாரத்தை விரிவாக அறிமுகப்படுத்திய பேராசிரியர் எஸ் . நீலகண்டன் இந்நூலில் நவசெவ்வியல் பொருளியலை அதே ஆற்றொழுக்கான நடையில் தெளிவாக அறிமுகப்படுத்தியுள்ளார் . உயர்கல்வி மாணவர்கள் மட்டுமல்லாமல் பொது வாசகர்களும் எளிதில் புரிந்துகொள்ளும்வகையில் அவர் எடுத்துக்காட்டும் உதாரணங்கள் நம் அன்றாட வாழ்க்கையிலிருந்து பயில்வதற்கும் பயிற்றுவிப்பதற்கும் இந்நூல் அரியதொரு கைவிளக்காகும் .
ஏன் , எதற்கு , எப்படி என்ற முடிவுறா வினாக்களை மனித குலம் எழுப்பியே தனது அறிவுப்புலங்களைக் கட்டமைத்துள்ளது . இவ் வினாக்களுக்கு ஓற்றைப் பதில் இருந்தால் அப்புலம் தேங்கிவிடும் . பொருளியல் புலமும் இதற்கு விலக்கல்ல . காலந்தோறும் பல்வேறு அறிஞர்கள் இத்துறைக்கு அறிவுச் செல்வத்தை வழங்கிச் சென்றுள்ளனர் . அவை ஒன்றோடு ஒன்று இயைந்தும் முரண்பட்டும் விளக்கி நின்றதால் பொருளியல் என்ற அறிவுப்புலம் வளமானதாகத் திகழ்கிறது . இத்தகைய அறிஞர்கள் பற்றி முழுவதும் அறிந்துகொள்வது இக்கால மாணவர்களுக்கும் பொது வாசகர்களுக்கும் மிகவும் தேவை . அத்தேவையை உணர்ந்து அதற்கெனக் கடுமையாக உழைத்து , தமிழில் நூல்களை வெளிக்கொணரும் அரிய பணியைப் பேராசிரியர் நீலகண்டன் சிறப்பாகச் செய்துவருகிறார் . நெருடல் இல்லாத தமிழில் எடுத்துக்காட்டுகளோடு , சிறந்த பல்வேறு பொருளியல் சிந்தனைகள் பற்றிய அறிமுகத்தை வழங்குவது பேராசிரியர் நீலகண்டனின் தனிச்சிறப்பு .