பேராசிரியர் நா.வானமாமலை அவர்களின் ‘ தமிழர் பண்பாடும் , தத்துவமும் ‘ என்னும் பெயருள்ள இந்நூல் அவர்கள் ஆராய்ச்சி என்னும் முத்திங்களிதழில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பாகும் . இந்நூல் , பண்பாடு என்றும் தத்துவம் என்றும் இரண்டு பிரிவுகளையுடையது . ‘ பண்பாடு ‘ என்னும் முதற் பிரிவிலே முருகஸ்கந்த இணைப்பு , பரி பாடலில் முருக வணக்கம் , கலைகளின் தோற்றம் , உலகப் படைப்புக் கதைகள் என்னும் கட்டுரைகள் அடங்கியுள்ளன .
‘ பழந்தமிழ் இலக்கியத்தில் பொருள் முதல்வாதக் கருத்துகள் ’ என்னும் தலைப்புள்ள கட்டுரை , பொருள்முதல் வாதத்தை ( உலகாயதக் கொள்கையை ) ஆராய்கிறது . வடநாட்டில் இருந்த பழைய உலகாயதக் கொள்கையைப் பற்றிச் சமீப காலத்தில் சில அறிஞர்கள் ஆராய்ந்து அது பற்றிச் சில நூல்களை எழுதியுள்ளனர் . ஆனால் தென்னாட்டு உலகாயதக் கொள்கையை இதுவரையில் ஒருவரும் ஆராய்ந்து நூல் எழுதவில்லை . திரு நா . வானமாமலை அவர்கள் , தமிழ் நாட்டு உலகாயதக் கருத்துக்களை இக்கட்டுரையில் ஆராய்கிறார் .
பொதுவாக இந்நூல் ஆராய்ச்சிக்குப் பெரிதும் பயன்படுமென்பதில் ஐயமில்லை . சிந்தனையை எழுப்பி ஆராய்ச்சிக்குத் தூண்டுகோலாக இருக்கிற இந்நூல் கட்டுரைகள் , அறிவுக்கு விருந்தாக உள்ளன . இது போன்ற ஆராய்ச்சி நூல்கள் தமிழில் மிகச்சில . பயனுள்ள நல்ல நூல் என்று இதனை வாசகர்களுக்குப் பரிந்துரைக்க விரும்புகிறேன் .