1946 ஆகஸ்ட் 16 ம் தேதி கல்கத்தாவில் நடந்த மதக் கலவரம்தான் இந்தியா – பாகிஸ்தான் பிரிவினைக்கே காரணமாக இருந்தது . இந்திய வரலாற்றிலேயே அதிபயங்கரமாக நடந்த அந்த மதக்கலவரத்தில் மூன்றே தினங்களில் 10,000 பேர் கொல்லப்பட்டார்கள் ; ஒரு லட்சம் பேர் தங்கள் வீடுகளை இழந்து அகதிகளானார்கள் . நடந்த படுகொலைகளும் கூட காட்டுமிராண்டித்தனமாக நடந்தன . இப்படுகொலைகளின் சாட்சியாக இதுபோன்ற நூற்றுக் கணக்கான புகைப்படங்கள் இன்று வரலாற்றின் ஏடுகளில் புகை படிந்து கிடக்கின்றன . இதையெல்லாம் ஒரு மீள்பார்வைக்கு உட்படுத்த விரும்பினால் நாம் வாசிக்க வேண்டிய ஒரே எழுத்தாளர் சி.சு. செல்லப்பா தான் . அவர் காலத்திய மற்ற எழுத்தாளர்கள் யாரும் இவ்வளவு நேரடியாக ஏன் , மறைமுகமாகவும் கூட சுதந்தரப் போராட்ட காலகட்டத்தின் அரசியலை எழுதியதில்லை . இதனாலேயே சி.சு. செல்லப்பாவின் சுதந்திர தாகம் மிகுந்த முக்கியத்துவம் பெறுகின்றது . –