ஈடுகட்ட முடியாத இழப்பின் பிடியில் சிக்கித் தவிக்கும் அரசு அதிகாரியான சந்திரன் அஸ்ஸாமில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட இன்ஜினீயர் ஒருவரை மீட்கும் பணியில் முனைந்து ஈடுபடும்போது சந்திக்கும் பலவிதமான மனிதர்கள் தமிழ்ப் புதின உலகுக்குப் புதிய பரிமாணங்களைச் சேர்க்கிறார்கள் . கடத்தல் தொடர்பான பேச்சுவார்த்தை உச்சத்தை அடையும் தருவாயில் சந்திரன் தன் நிறுவனத்தில் நடந்த பெரிய ஊழலைக் கண்டுபிடிக்கிறான் . அதனால் தனக்கு ஏற்படும் சிக்கல்களையும் கடத்தல் நாடகம் எவ்வாறு முடிவுறுகிறது என்பதைப் பற்றியும் நாவல் எழுத முனைகிறான் . பல அடுக்குகள் கொண்ட இந்த நாவல் கதைக்கும் அதை எழுதுபவனுக்கும் உள்ள எல்லைக்கோட்டை மாறி மாறிக் கடக்கிறது . சந்திரனின் மனைவி சுகன்யாவுக்கும் அவன் நண்பர்களுக்கும் இடையிலான கடிதப் பரிவர்த்தனையில் உண்மையின் பல சாயல்கள் இயல்பாக வெளிப்படுகின்றன .
தாய்மொழியிலும் ஆங்கிலத்திலும் திறம்பட எழுதும் மிகச் சில இந்திய எழுத்தாளர்களில் ஒருவரான பி . ஏ . கிருஷ்ணன் தன் முதல் நாவலான The Tiger Claw Tree ஐத் தமிழில் புலிநகக் கொன்றை எனப் படைத்தார் . பரவலான கவனத்தையும் பாராட்டையும் பெற்ற அப்படைப்புக்குப் பின் கலங்கிய நதி கிருஷ்ணனின் இரண்டாம் புதினமான The Muddy River இன் தமிழ் வடிவமாக வெளிவருகிறது .