புதுமைப்பித்தன் , ந.பிச்சமூர்த்தி , கு.ப.ரா , மௌனி போன்றவர்களை முன்னோடிகளாகக் கொண்ட தீவிர இலக்கியச் சிறுகதைப் போக்கின் வாரிசு அல்ல தமிழ்மகன் . அதே சமயம் இன்றைய வெகுஜனச் சிறுகதைகளின் கிளுகிளுப்புகளும் அபத்தங்களும் கொண்ட கதைகளை எழுதுபவரும் அல்ல . தரமான வெகுமக்கள் சிறுகதைகளுக்குத் தமிழ்மகனின் கதைகளைச் சிறந்த உதாரணமாகக் குறிப்பிடலாம் . அப்படியொரு வெகுஜனக் கதை மரபு தமிழில் ஒரு காலத்தில் இருந்து , இன்று காணாமல் போய்விட்ட அல்லது தரம் தாழ்ந்துவிட்ட சூழ்நிலையில் , தமிழ்மகனின் கதைகள் கவனிப்புக்குரியவையாகின்றன . தீவிர இலக்கியவாதிகளும் பொருட்படுத்தி வாசிக்கத் தகுந்தவையாகின்றன என்பது என் நம்பிக்கை .