லாமாக்களின் பூமியான திபெத்தில் சுவிசேஷப் பணியை மேற்கொள்ளும் விழைவுடன் இந்தியாவின் வடகிழக்கில் பூர்வகுடிகளின் வாழிடம் வழியாகப் பயணிக்கும் பிரெஞ்சுப் பாதிரியைத் தம் எல்லைக்குள் புகுந்துசெல்ல பழங்குடிகள் அனுமதி மறுக்கின்றனர் . மிஷனரிகளைத் தொடர்ந்து அன்னிய ஆட்சியாளர்கள் தம் மண்ணுக்குள் ஊடுருவி வந்து காலங்காலமாக இருந்துவரும் உரிமைகளையும் , சுதந்திர வாழ்வையும் ஒருசேரப் பறித்துவிடுவார்கள் என்ற அச்சத்தின் நடுவிலும் , பிரிட்டிஷ் அதிகாரிகளுக்குச் சிலர் துணைபோவதால் இனக் குழுக்களிடையே மூளும் மோதல்களுடன் ஆழ்ந்த காதலும் முகிழ்க்கிறது .
வடகிழக்கு மண்ணின் இயற்கை எழிலையும் பூர்வகுடிகளின் வாழ்க்கைமுறை , சடங்குகள் , நம்பிக்கைகள் போன்றவற்றையும் அழியாத சித்திரமாகத் தீட்டிக்காட்டுகிறது இந்நூல் . விரிந்து நீண்ட களப்பணிகளில் திரட்டிய தரவுகளின் மூலம் மறைந்துபோன மெய்யான வரலாற்றைக் கற்பனை போலக் கட்டமைத்துள்ள இந்தப் புதினம் , 2017 ஆம் ஆண்டின் சிறந்த ஆங்கில மொழி படைப்புக்கான சாகித்திய அகாதெமி விருது பெற்றது .