நோபல் பரிசு பெற்ற துருக்கிய எழுத்தாளர் ஓரான் பாமுக்கின் ஞாபகப் புத்தகம் ‘ இஸ்தான்புல் ‘ . தான் பிறந்து வளர்ந்து வாழ்ந்துகொண்டிருக்கும் நகரத்தைப் பற்றி நினைவுகூரும் இந்நூலில் பாமுக் தனது இளமைப் பருவத்தையும் திரும்பிப் பார்க்கிறார் . இளம்பருவத்திலேயே ஒரு எழுத்தாளனின் வளர்ச்சி நிலைகள் தனக்குள் துலங்கியதை நினைவுகூர்கிறார் . தனது நகரம் மாறியதையும் நகரத்தோடு தானும் மாறியதையும் நுட்பமாகச் சொல்லிச் செல்கிறார் . ஓவியனாக விரும்பி எழுத்தாளனாக மாறிய பாமுக் இஸ்தான்புல் நகரத்தைத் தனது எழுத்துமூலம் அசாதாரணமான அருங்காட்சியகமாக மாற்றுகிறார் .
ஒரு நகரத்தின் கதை என்ற நிலையிலேயே ஓரான் பாமுக்கின் படைப்பாற்றல் மூலம் இஸ்தான்புல் ஒரு பண்பாட்டின் மையமாகவும் மாற்றங்களின் திருப்புமுனையாகவும் மனிதர்களின் கதைக்களமாகவும் வரலாற்றின் சின்னமாகவும் மாறுகிறது . தனது நகரமான இஸ்தான்புல்லைப் பற்றிச் சொல்லும்போது அவர் பெருமிதம் கொள்கிறார் . நெகிழ்கிறார் . தன்னுடைய கற்பனைத்திறனுக்குச் செழுமையூட்டிய இஸ்தான்புல்லை ஓரான் பாமுக் நினைவுகூரும் விதம் மிக இயல்பானது . அதே சமயம் மிகமிக அசாதாரணமானது .