வெண்முரசு எழுதிக்கொண்டிருக்கும் இத்தருணத்திலும் சிறுகதைகள் எழுதுவது எனக்குத்தேவையாக இருக்கிறது . இது அந்த பெருமொழிபின் வெளியில் இருந்து அகன்று எனக்கான சிறிய உலகை , நான் வாழும் அன்றாடத்தின் சிறுதருணங்களை உருவாக்கிக்கொள்வதற்காக . இங்கே நான் என் சிறுதூண்டிலில் சிக்கும் சிறிய மீன்களை எடுத்துக் கொள்கிறேன் . இவற்றை எழுதிய எல்லா கணங்களும் அரியவை , ஆழத்தில் நலுங்கிய நிறைவின்மை ஒன்றை நிகர் செய்துகொண்டவை .
அதேசமயம் இவையனைத்துமே வெண்முரசுக்கான எதிர் வினைகளும்கூட . அயினிப்புளிக்கறி போல எந்த விதமான பெருமைகளும் தனித்தன்மைகளும் இல்லாத சாதாரண மனிதர்களின் சாதாரணத் தருணங்களின் இனிமையை எழுதும்போது நான் மகாபாரதத்தின் மாமனிதர்களின் பெருந்தருணங்களின் ஓங்கிய துயரையும் இனிமையையும் நிகர்செய்கிறேன் . ஆகவே இவை எனக்கு அணுக்கமானவை . வாசகர்களுக்கும் அவ்வாறே இருக்கும் என நினைக்கிறேன் . –