உலகச் செவ்வியல் நாவல்களின் தர வரிசைப்பட்டியல் எந்த மொழியில் எவரால் தயாரிக்கப்பட்டிருந்தாலும் அதன் முதல் பத்து இடங்களுக்குள் தவறாமல் இடம் பெறும் மகத்தான தகுதியைப் பெற்றிருப்பது நாவல் பேராசான் ஃபியோதர் தஸ்தயெவ்ஸ்கியின் குற்றமும் தண்டனையும் என்னும் பேரிலக்கியம் .
குற்றம் / தண்டனை ஆகிய இருமைகளைக் குறித்து விரிவான சமூகவியல் உளவியல் பின்னணிகளோடு கூடிய தர்க்கபூர்வமான இரு தரப்பு வாதங்களையும் முன் வைத்து கதைக்கட்டுக்கோப்பு சற்றும் குலையாதவண்ணம் இந்நாவலில் மிக விரிவான ஆழமான ஆராய்ச்சி ஒன்றையே நிகழ்த்தியிருக்கிறார் தஸ்தயெவ்ஸ்கி . ஒரு செயல் எப்போது குற்றமாகிறது … அப்படி அது குற்றம் என்று கருதப்படுமானால் அதற்கான தண்டனை வர வேண்டியது எங்கிருந்து என்பது போன்ற சிந்தனைகளின் பாதிப்புகளால் இந்நாவலின் மெய்யான வாசகர்கள் அலைக்கழிக்கப்படுவதே இந்நாவலின் வெற்றி .
ஒரு மனநிலைச் சித்திரிப்பு , உடனேயே அதற்கு நேர் எதிரான மற்றொரு மனநிலைச் சித்திரிப்பு , மிக எளிமையாகத் துவங்கி அப்படியே தத்துவார்த்தத் தளத்திற்கு உயர்ந்துவிடும் உரையாடல்கள் என்று தீவிரமான மொழிநடையோடும் மொழிநடையோடும் செறிவான கதைப்பின்னலோடும் உருவாகியிருக்கும் இந்தப் படைப்பை இதுவரை இருபத்தாறு உலக மொழிகளில் பெயர்க்கப்பட்டிருக்கும் இந்த நாவலை முதன் முதலாகத் தமிழில் மொழிபெயர்க்க வாய்த்தது நான் செய்த நற்பேறு .