உலகமொழிகளிலேயே ‘ ழ ‘ என்ற சிறப்பெழுத்து தமிழ் மொழி தவிர்த்து வேறு எந்த மொழியிலேயும் கிடையாது என்னும் பெருமை யாருக்கு இருக்கிறதோ இல்லையோ பானமுற்றோருக்கு உண்டு …. அவர்களைத் தவிர்த்து யாரும் அந்த எழுத்தை உச்சரிப்பதில்லை என்று நினைக்கையில் என் கண்களில் நீர் ஆறாய்ப் பெருகுவதை என்னால் தடுக்கமுடியவில்லை . உங்களுக்கு சந்தேகமிருந்தால் டாஸ்மாக் வாசலில் நின்று கொண்டு எதிரில் வரும் மதுமக்களிடம் போய் , “ குட் நைட் பிரதர் ” என்று சொல்லிப் பாருங்கள் உடனடியாக சேம் டு யூ பிரதேழ் ! ” என்னும் பதில் உங்களுக்குக் கிடைக்கும் .
‘ லகர , ளகர , ழகரங்களை உச்சரிப்பதில் இந்தச் சாமானியர்களுக்கு என்ன கொள்ளையோ ? ‘ என்பது போலத்தான் நடந்து கொள்கிறார்கள் . ஒருமுறை கோலப்பன் ஒருவர் கடையில் போய் , “ எண்ணே வாலப்பலம் இருக்கா ? ” என்று கேட்டதற்கு , கடைக்கார பாப்பச்சன் இவ்வாறு பதிலளித்தார் , “ வாலப்பளம் இள்ள தம்பி ! ” இவர்களால்தான் மெல்லச் சாகிறது தமில் .
இந்தப் புத்தகத்தின் ஆசிரியர் குறித்து எதுவும் சொல்வதற்கில்லை . சிம்பிளாகச் சொல்ல வேண்டுமானால் , தற்குறி , பித்துக்குளி , வட்டன் , அரைவேக்காடு , கோந்தன் , வாபொளந்தான் , கருங்கோழி என்று சூழலுக்குத் தகுந்தவாறு ‘ பொதுமக்கள் ‘ இவரை அழைப்பார்கள் . ஆனால் ‘ மதுமக்கள் ‘ இவரை ஒரு ஞானி என்று சொல்கிறார்கள் . ” இந்த உலகம் ஒரு சூட்டுத் தழும்பு ! ” என்ற கருத்தை ஆசிரியர் முன்வைத்தபோது இவருடைய வயது அறுநூற்றி இருபது . சாக்ரடீஸையே காதில் விஷம் ஊற்றிக் கொன்ற உலகல் லவா ? ஆகையால் அமைதிக்கான நோபல் பரிசுக்காக இவர் காத்திருக்கிறார்